பிரம்மாண்டமான வாஜபேய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வசிஷ்ட மகரிஷி, காமதேனுவை அனுப்பி யாகத்திற்குண்டான பொருட்களை கொண்டு வருமாறு பணித்தார். வெகு நேரமாகியும் காமதேனு வராததால், பூவுலகிலேயே வசிக்கும்படி சாபம் கொடுத்து விடுகிறார்.
சாப விமோசனம் பெறும் வழியை பிரம்மன் மூலமாக கேட்டறிந்து கொண்ட காமதேனுப் பசு, இங்குள்ள அசுவத்தவனம் வந்தடைந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இவ்விறைவனை வழிபட்டது. தானே தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டது.
பசு வழிபட்டு சாப விமோசனம் அடைந்ததால் பசுபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது. ஆ (பசு) வழிபட்ட ஊர் ஸ்ரீ ஆவூர் என்பதும் பசுபதீஸ்வரத்தின் மறு பெயரே.
தசரத சக்ரவர்த்தி தேரில் வரும்போது சக்கரத்தில் ஏதோ இடறியதால், தேரை நிறுத்தி தோண்டிப் பார்த்ததில் சிவலிங்கம் தென்பட்டது. தசரதர் லிங்கத்தை வழிபடும் கல் சிற்பம் ஒன்று காணப்படுகிறது.
ஆவூர் கிழார், பெருந்தலை சாத்தனார் போன்ற சங்ககால புலவர்கள் ஆவூரைச் சேர்ந்தவர்களே.
தேவாரத்திருத்தலம்.