தனது இறுதிக் காலத்தை காசி-கங்கை போன்ற இடங்களில் கழிக்க வேண்டும் என எண்ணிய ஜடாயு, அந்த வரத்தைப் பெற வேண்டி, சிவபெருமானை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தது. ராவணன் சீதையை கவர்ந்து செல்லும் போது போரிட்டு உயிர் நீப்பாய் - அப்போது இங்கு முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்குகிறேன், அதில் மூழ்கி புண்ணியம் பெறுவாயாக என வரமருளினார்.
ஸ்ரீ ராமர் பூஜித்த ஸ்தலம். மேற்கே ராமசாமி கோவில் ஒன்றும் இருக்கின்றது. குருவி ராமேஸ்வரம் என்றும் அரியான்பள்ளி என்றும் கூறுவர்.
இத்தீர்த்தத்தை ஷோடஸ சேது என்பர். இதற்குள் 16 கிணறுகள் உள்ளன. கங்கையை விட 16 மடங்கு சிறப்பு வாய்ந்தது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் கேக்கரை என்பர்.
சுத்தமான இடத்தில் ஆற்று மணலை எடுத்து வைத்து, அதனை கரிசலாங்கண்ணி இலைகளால் மூடி வைத்து, தேங்காய் எண்ணெய் மற்றும் கரிசலாங்கண்ணி எண்ணெய் நிரப்பிய ஒன்பது விளக்குகளை ஏற்றி சாட்சியாக வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்து மூதாதையர்களை மகிழ்விக்கின்றனர் என குறிப்பொன்று கூறுகிறது.