இத்தலத்தில் சூரியன், சந்திரன், பிரம்மா, சந்திர ரோக தீர்த்தங்கள் ஆகியன உள்ளதால் பஞ்சதீர்த்தபுரம் என்று அழைக்கின்றனர். சூரியன் வழிபட்டதால் அருணபுரம் எனப் பெயர். ஐந்தெழுத்துக்களும் இறைவனை வழிபட்டதால் பஞ்சாட்சரபுரம் என்றும் வழங்கலாயிற்று.
உத்தம சோழனின் மகளாக அம்பிகை அவதரித்து இறைவனை மணந்து கொண்ட ஸ்தலம். துர்வாசரின் கோபத்தை நீக்கி அவருக்கு நல்லுபதேசம் செய்த ஸ்தலம். இவ்விறைவனை வழிபட்டால் கோப குணம் நீங்கி சாத்வீகத்தன்மை பெறுவர்.
தேவலோகத்து மரங்கள், துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்று பூலோகத்தில் இத்தலத்தில் நெல்லி மரங்களாக வளர்ந்தன. அதனுடைய அருமை பெருமைகளை உணர்த்த, இறைவன் நெல்லி மரத்தடியிலேயே எழுந்தருளினார்.
பிரகாரத்தில் ஸ்தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. இதன் காய்கள் சுவாமிக்கு மட்டுமே பயன்படுகின்றன.
இவ்வூரில் நெல்லி மரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதால் இவ்வூர் திருநெல்லிக்காவல் எனப் பெயர் கொண்டது.
கோவிலுக்கு தெற்கே பிரம்ம தீர்த்தமும் வடக்கே சூரிய தீர்த்தமும் உள்ளன.
ஆர்வமற்ற நிலை, சோம்பல் ஆகியன இருந்தால் பரணி தோஷம் என்பர். அவற்றிலிருந்து விடுபட நெல்லி மர நிழலில் சிறிது நேரம் இளைப்பாற வேண்டும்.
திருநாட்டியத்தான்குடி, திருநெல்லிக்காவல், திருக்காரவாசல், திருத்தெங்கூர், நமசிவாயபுரம் ஆகிய ஐந்து ஊர்களையும் பஞ்சகூடபுரம் என்பர்.
தேவாரத் திருத்தலம்