அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு காமதேனுப் பசு பாலாலும், நெய்யாலும் அபிஷேகம் செய்த ஸ்தலம் இது. பசுவின் நெய்யில் ஆடிய அப்பர் என்பதால் நெய்யாடியப்பர் எனும் திருநாமம் கொண்டார்.
பாலுக்குள் நெய்யாக இருக்கும் இறைவனை விளங்க வைப்பதற்காக காமதேனுப் பசு பாலாலும், நெய்யாலும் அபிஷேகம் செய்தது என்பர். நெய்யாடியப்பருக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்பவர்கள் எல்லா நலன்களும் பெறுவர்.
சப்த ஸ்தான பல்லக்கு விழாவின்போது, திருவையாற்று பெரிய பல்லக்கும், மாப்பிள்ளை பல்லக்கும் திருப்பழனத்துப் பல்லக்கை அழைத்துக் கொண்டு இவ்வூருக்கு வரும். சோற்றுத்துறை நாதரும், அன்னபூரணியும் இவர்களை எதிர்கொண்டழைத்து வந்து, ஊருக்குள் வலம் வந்து, பின் எல்லோருமாக ஒன்றுசேர்ந்து திருவேதிகுடி செல்வார்கள். இப்படியாக 6 ஊர்களின் பல்லக்குகளும் இங்கு வருவதும், இங்குள்ள நெய்யாடியப்பர் அவர்களை எதிர்கொண்டு அழைப்பதும், பின்னர் எழுவருமாக சேர்ந்து உலா வருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பக்தர் ஒருவர் தினமும் இவ்வாலயத்திற்கு வந்து ஸ்வாமிக்கு நெய் விளக்கேற்றிவிட்டு, போகும்போது இக்கோவிலில் உள்ள கீரையைப் பறித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். தொடர்ந்து பல வருடங்கள் இப்படி நடக்குமாம். ஒரு நாள் ஸ்வாமியிடம் சென்று, "உனக்கு தினமும் விளக்கேற்றுகிறேனே, எனக்கு ஏதாவது செய்யக் கூடாதா?" என்று கேட்டாராம். "அதுதான் தினமும் கீரையைப் பறித்துச் செல்கிறாயே" என அசரீரி கேட்டதாம். சிவசொத்திற்கு ஆசைப்படலாகாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தேவாரத் திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.