திருமந்திரம் உபதேசித்த பெருமாளே எழுந்தருளியிருப்பதால் பத்ரிக்கு ஒப்பானது என்பர். இதனால் பத்ரி நாராயணர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.
நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மனை தேரோட்டச் செய்து, பத்ரி நாராயணரே இத்தலம் வந்து, சிவபெருமானை சாந்தப்படுத்தியதாக ஐதீகம். இதனை உணர்த்தும் வகையில் கோவிலே, தேர் போன்று அமைந்துள்ளது. வழக்கம் போல் கருடன் மீதேறி வராமல் தேரில் வந்ததால், தனக்கு வாய்ப்பளிக்குமாறு பிரார்த்திக்கிறான் கருடன். மூலவர்க்கு எதிரே இல்லாமல், கொடிமரத்தருகே கருடாழ்வார் காணப்படுகிறார்.
11 திவ்ய தேசங்களுக்கும் இவரே பிரதான மூர்த்தியாக இருப்பதால், நாங்கூரின் 11 திவ்யதேசங்களின் பெருமாள்களும், இத்தலத்தில் கருட வாஹனத்தில் எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர்.
ஸ்வயம்பிரகாச ஞானத்தை உடைய எம்பெருமான் இங்கு சேவை சாதிப்பதால் நந்தா விளக்கே எனப் போற்றி பாடுகின்றார் திருமங்கை ஆழ்வார்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - (11) நாங்கூர் திவ்ய தேசங்களின் ஆதார ஸ்தலம்.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - தத்புருஷ பீடம் - மூலவர்: மதங்கீஸ்வரர்
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை - யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன், யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் - ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.