ஆதிசேஷன் எனப்படும் நாகராஜன் தன் பத்தினியர் இருவருடன் பாதாள லோகத்திலிருந்து இத்தலம் வந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டான் என புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன. இதனால் இவ்விறைவனுக்கு நாகநாதர் என்றும், இவ்வூருக்கு திருநாகேஸ்வரம் என்றும் பெயர்கள் வந்தன.
ஒரு சிவராத்திரி புண்ணிய தினத்தன்று உச்சி வேளையில் நாகராஜன் இவ்விறைவனை வழிபட்டான். ஆதலால் இவ்வாலயத்தில் உச்சிவேளை வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது.
சுசில முனிவர் தான் நடத்தவிருக்கும் வேள்விக்குரியப் பொருட்களை கொண்டு வர, தன் மகனை காட்டுக்கு அனுப்பினார். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு திரும்பும் வழியில் தச்சகன் எனும் நாகம் தீண்டி பிள்ளை இறந்துவிட்டான். மகனின் உயிரைக் குடித்த விஷப்பாம்பை மானிடசர்ப்பமாக பிறக்கக்கடவாய் என சாபமிட்டார் முனிவர்.
மானிடப்பாம்பாக மாறிய தச்சகன் சிவராத்திரியன்று முதல் ஜாமம் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமம் திருநாகேஸ்வர நாகநாதரையும், மூன்றாம் ஜாமம் திருப்பாம்புர பாம்புரநாதரையும், நான்காம் ஜாம வேளையில் நாகப்பட்டினத்திலும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருநாகேஸ்வரத்தில் சுய உருவம் பெற்ற தச்சகன், ஸ்வாமியின் கட்டளைப்படி இங்கேயே தங்கி விட்டான்.
நாகத்தின் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம் என்பதால் இது நாகதோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
நவகிரகங்களுள் ராஹு பகவான் இங்கு விசேஷ மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் ராஹு தோஷ பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது.
சக்தி இடம் பெற்ற பாகத்தை விலக்கி சிவ வடிவத்தை மட்டும் வலம் வந்த பிருங்கி முனிவருக்கு, தன் கணவர் அருள் புரிவதை பொறுக்காமல் கோபமுற்ற பார்வதி இங்கு வந்து ஸ்ரீ சக்கர மேரு மீது நின்று தவமியற்றினாள். தவமியற்றும் பார்வதியே கிரிகுஜாம்பிகை. கூடவே லட்சுமி, சரஸ்வதி தேவியர்களும் வந்து விட்டனர்.
அகலிகையிடம் தகாது நடந்து கொண்ட இந்திரன் கௌதம ரிஷியின் சாபத்தினால் பூனையாக மாறி கிரிகுஜாம்பிகையை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். இப்போதும் அம்பாளுக்கு, மகர சங்கராந்தியன்று இரவு சந்நிதிக்கு திரையிட்டு, திரைக்கு பூஜை செய்வார்கள். இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம்.
விநாயகர் இங்கு வழிபட்டு கணங்களுக்கு பதியாகும் பதவி பெற்றார். காலங்கிரி முனிவரின் சாபத்தைப் பெற்று பேயுருவில் திரிந்த சம்புமாலி என்பவன் சுய உருவம் பெற்ற ஸ்தலம். இந்திரன், பிரம்மன், ஆதிசேஷன், தட்சகன், கார்க்கோடகன் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம் - நவகிரக ஸ்தலங்களுள் ஒன்று (ராஹு ஸ்தலம்).