சைவ சமயத்தைச் சார்ந்த பெண்ணொருத்தி வைணவருக்கு வாழ்க்கைப்பட்டாள். தனது கணவருக்கும் மாமியாருக்கும்
தெரியாமல் சிவபூஜையைத் தொடர்ந்து செய்து வந்தாள். கன்றுக்குட்டியை கட்டும் தறி எனப்படும் ஆப்பு - அதனையே
சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டு வந்தாள்.
ஒரு நாள் இந்த செயலைக் கண்டுபிடித்துவிட்ட அவளது கணவன், அந்த தறியைக் கோடரியால் பிளந்தான். அப்போது
அதினின்று வெளிப்பட்டார் சிவபெருமான்.
கன்றுக்குட்டியைக் கட்டும் தறியிலிருந்து உருவான இறைவன் என்பதால் நடுத்தறிநாதர் என்று அழைக்கப்பட்டார்.
இவ்வூரும் கன்றாப்பூர் என வழங்கப்படலாயிற்று. (கன்று - ஆப்பு - ஊர்)
காம்பிலி தேசத்து அரசனான இடும்பன் இவ்விறைவனைப் பிரார்த்தித்து புத்ர பாக்யம் பெற்றார். பஞ்ச பாண்டவர்கள்
இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களால் உண்டாக்கப்பட்ட தீர்த்தமே பாண்டவ நதி.