இறைவனிடமிருந்து வாமபாகம் பெற வேண்டி பராசக்தி ஒற்றைக்காலில் தவம் மேற்கொண்ட ஸ்தலம் இது. பராசக்தி ஏகாந்தமாக தவம் செய்ய இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து, தவம் மேற்கொண்டாள். பராசக்திக்கு உதவ வேண்டி, காமதேனு தனது நான்கு புதல்விகளுள் ஒருத்தியான பட்டியை அனுப்பியது.
(சபளீ, விடலீ, நந்தினி, பட்டி ஆகிய நான்கு புதல்விகள்)
காமதேனுவின் புதல்வியர் நால்வரில் ஒருத்தியான பட்டி என்பவள் வழிபட்டு பூஜித்ததால் இறைவன் பட்டீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். ஊருக்கு பட்டீஸ்வரம் எனப் பெயர் வந்தது.
விஸ்வாமித்ரருக்கு காயத்ரி மந்திரம் சித்தி பெற்று பிரம்ம ரிஷி பட்டம் கிடைக்கப் பெற்ற ஸ்தலம் இது.
ராவண வதத்தால் ராமருக்கு உண்டான ராஜஹத்தி மற்றும் சாயாஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது.
ராமபிரான் தனது கோதண்டத்தால் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை பூஜித்துள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஞானசம்பந்தர் போகும் வழியில் வேனில் வெப்பம் தெரியாதபடி இருக்க முத்துப்பந்தல் அமைக்கும்படி பூதகணங்களுக்கு கட்டளையிட்டார் இறைவன். வானத்தில் அசரீரியும் முத்துப்பந்தலும் ஒருங்கே தோன்ற சம்பந்தர் இத்தலம் வந்து சேர்ந்தார்.
கோபுரத்தின் புறத்தே நின்று கொண்டு ஞானசம்பந்தர் இறைவனை வணங்கியபோது, நந்தியை விலகி நிற்குமாறு பணித்துவிட்டு பட்டீஸ்வரர் தரிசனம் தந்தார். இன்றளவும் நந்தி விலகியே காணப்படுகிறது.
காம்பீலிதேசத்து அரசன் இவ்வுர் துர்க்கையை வேண்டி புத்ர பாக்யம் பெற்றான்.
சோழ மன்னர்கள் போர்க்களம் செல்லும் முன், முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், பட்டீஸ்வர துர்க்கையை வணங்கி வழிபட்ட பின்னரே செயல்படுவார்கள்.
மார்கழி மாத அமாவாசையன்று ராமர் உண்டாக்கிய தீர்த்தத்தில் அனைவரும் நீராடுவார்கள்.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.