ஸ்ரீ துர்க்கா தேவி, அனைவரையும் இம்சித்த மகிஷாசுரன் எனும் அசுரனின் தலையை துண்டித்து வீழ்த்திய இடம் மேடானதால் கிடாத்தலைமேடு எனப் பெயருற்றது.
சிவபெருமான் மீது மலரம்புகள் வீசி அவரது தியானத்தை கலைத்த மன்மதன், சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு இறந்தான். மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டி ரதி தேவி மன்றாடியதால், அவனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி, வரமருளினார்.
செய்த தவற்றிற்கு பிராயச்சித்தம் வேண்டி மன்மதனும் ரதியும் இங்கு தவமிருந்தனர். கரும்பு வில்லையும் புஷ்ப பாணங்களையும் அம்பாளிடமிருந்து மீண்டும் பெற்றனர். இதனால் அன்னைக்கு காமுகாம்பாள் என்ற பெயரும் வந்தது.
துர்க்கை சிலை செய்வது பூர்த்தியாகி பிரதிஷ்டை பண்ண இருக்கும் தறுவாயில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்க்கை, தனக்கு மூக்குத்தி வேண்டுமென கேட்டுள்ளாள். சிலை முடித்தபின் மாற்றங்கள் செய்தால், பின்னமாகி விடுமே என அஞ்சிய சிற்பி, செய்வதறியாது குழம்பிய நிலையில், உளியைவைத்தவுடனேயே, சிறிய துவாரம் ஒன்று தானாக ஏற்பட்டு, அதில் மூக்குத்தி பொருந்திக் கொள்ளும் அதிசயம் நிகழ்த்திய துர்க்கை.
ஒரு விசேஷ ஏற்பாட்டில், இத்தலத்தில், 300 சுமங்கலிப் பெண்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்து, புடவை மற்றும் மங்கலப் பொருட்கள் விநியோகம் செய்தனர். அப்போது வயதான மூதாட்டியாக துர்க்கா தேவியே வந்து உணவருந்தி, புடவை பெற்றுக் கொண்டு போனதை ஊர் மக்கள் நினைவு கூர்கின்றனர்.