நீர் வளம், நில வளம், ஊர் வளம் இம்மூன்றிலும் சிறந்த இவ்வூர் நறுமணம் மிகுந்த பூக்களைக் கொண்ட சோலைகளை உடையது. பூக்களிலிருந்து நறை அதாவது தேன் சொரிவதால் நறையூர் எனப் பெயர் கொண்டது.
வஞ்சுள மரங்கள் (நீர்நொச்சி) மிகுந்த வகுளாரண்யத்தில் உள்ள நந்தவனத்தில் பர்ணசாலை அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. திருமாலிடம் பிணக்கு கொண்ட திருமகள், பூலோகம் வந்து இந்த நந்தவனத்திற்கு வந்து சேர்ந்தாள். கன்னிப் பெண்ணாக நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த திருமகளைப் பார்த்த மேதாவி மகரிஷி, அவளது பூர்வீகத்தை விசாரித்தார்.
தான் ஒரு அநாதை என்றும் தன்னை மகளாக ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினாள் அந்தப் பெண். அவளை மகளாக ஏற்று வளர்த்து வந்தார் மகரிஷி. வஞ்சுளாரண்யத்தில் கிடைத்ததால் வஞ்சுளவல்லி எனப் பெயரிட்டிருந்தார் மகரிஷி. எனினும் அவளை நாச்சியார் என்றே கூப்பிட்டு வந்தார். இப்பெண்ணை திருமாலுக்கே மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மகரிஷி, அதை நிறைவேற்ற வேண்டி திருமாலை நோக்கி தவமிருந்தார்.
திருமகளைப் பிரிந்ததினால் மிகவும் கவலையுற்ற திருமால், வாசுதேவ - சங்கர்ஷண - பிரத்யும்ன - அநிருத்த - புருஷோத்தம எனும் வியூக மூர்த்திகள் சகிதம் பிராமண வடிவம் கொண்டு பூலோகம் வந்து திருமகளைத் தேடலானார். கருடனும் ஒரு புறம் பறந்து திருமகளைத் தேடலானார்.
மேதாவி மகரிஷி இல்லத்தில் வஞ்சுளவல்லியாக வளர்ந்து கொண்டிருப்பவள் திருமகளே என கருடன் மூலமாக அறிந்து கொண்ட திருமால், அந்தணர் வடிவில் வஞ்சுளாரண்யம் வந்து வஞ்சுளவல்லியின் கையைப் பற்றினார். இதைக் கண்ணுற்று சபிக்க முற்பட்ட மகரிஷிக்கு, தனது சுயரூபத்தைக் காட்டினார் திருமால்.
வஞ்சுளவல்லி எனப்படும் நாச்சியாரை, திருமாலுக்கு மணம் முடித்துத் தர, மகரிஷி விதித்த நிபந்தனைகள் - திருமாலுடன் வந்த ஐந்து வடிவங்களுடன் பஞ்ச மூர்த்திகளாக இத்தலத்திலேயே எழுந்தருளி, திருமணக் கோலத்தில் சேவை சாதிக்க வேண்டும். இரண்டாவதாக இவ்வூரின் பெயர் நாச்சியாரின் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக இங்கே நாச்சியாருக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு வஞ்சுளவல்லியை மணக்கின்றார் திருமால். இங்கு நாச்சியாருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் பெருமாளை விட 3 அங்குலம் முன்னால் தாயார் இருப்பது, முன்னுரிமை அளிப்பதை குறிப்பதாக உள்ளது எனக் கூறுவர்.
கருடன் வைரமுடியை எடுத்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தபோது ஒரு மணி சிதறி திருநறையூரில் விழுந்தது. சிதறி விழுந்த இடம் மணிமுக்தா நதியாக விளங்குகிறது. சிதறிய மணியை எடுத்து கிரீடத்தில் பொருத்தி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு தானும் அவர் பக்கத்திலேயே நின்று கொண்டார் கருடன் என ஸ்தல வரலாறு.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.