கோட்டைமேடு என்றழைக்கப்படும் கோட்டையை முற்றுகையிட்டு ஆங்கிலேயர்களும், அவர்களுடன் போரிட்ட திப்பு சுல்தான் படைகளும், உதவிக்கு வந்த மைசூர் படைகளும் மோதிக் கொண்டிருந்தன. (1768 - 1791)
கோட்டையைச் சுற்றி கூடாரங்களமைத்து போர்வீரர்கள் தங்கினார்கள். மைசூரிலிருந்து வந்த படைக்கலன்களுடன் லிங்க வடிவிலான அம்மன் உருவம் ஒன்றும் கலந்து வந்துவிட்டது.
போர் முடிந்து படைக்கலன்களுடன் இதையும் எடுத்துச் சென்ற மைசூர் படையினர், மைசூருக்குச் சென்று பார்த்தபோது இந்த உருவம் மாயமாய் மறைந்துவிட்டது. மீண்டும் இங்கே வந்து பார்த்ததில் இந்த வடிவம் இங்கேயே நிலை கொண்டது தெரிய வந்தது. எவ்வளவோ முயன்றும் அதை பெயர்த்து எடுத்துச் செல்ல முடியவில்லை.
பின்னாளில், படைவீரன் ஒருவனது கனவில் தோன்றிய மாரி, தான் வேப்பமரக்கிளைகளிடையே இருப்பதாகத் தெரியப்படுத்தினாள். மறுநாள் மாரி குறிப்பிட்ட இடத்திற்குத் தேடி வந்த படைவீரன், நீர்ச்சுனை அருகேயுள்ள வேப்ப மரக்கிளைகளிடையே மாரியம்மன் இருப்பதைக் கண்டு, அதை எடுத்து வந்து ஊர்மக்கள் உதவியுடன் பிரதிஷ்டை செய்து கோவிலெழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
படைக்கலனுக்கு 'தண்டு' என்று பெயர். படைக்கலன்களோடு வந்த சேர்ந்த திருவுருவம் என்பதால் 'தண்டு மாரியம்மன்' என்று பெயர் பெற்றது.