நான்கு வேதங்களும் இத்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை வழிபட்டு, தங்களது தோஷங்களைப் போக்கிக் கொண்டன. இதனால் சதுர்மங்களம் என்ற பெயரைக் கொண்டது இவ்வூர். முன்நாளில் தொடர்ந்து பல வேள்விகள் செய்து கொண்டிருந்தனராம். இதனால் வேத ஸ்ரேணி எனப் பெயருற்று பின்னர் வேள்விச்சேரி என அழைக்கப்பட்டு, நாளடைவில் வேளச்சேரி என்றானது.
மார்க்கண்டேயன் விஷயத்தில் செய்த தவற்றினால் சிவ அபராதத்திற்குட்பட்ட யமதர்மராஜன் இங்கு வந்து தீர்த்தம் ஒன்றை அமைத்து பலகாலம் தவமிருந்து இறைவன் அருள் பெற்றான். யமனின் தண்டத்தை சிவபெருமான் வைத்திருந்ததால் தண்டீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
அசுரனை சம்ஹாரம் செய்து தோஷம் கொண்ட சப்த கன்னியர்கள் இவ்விறைவனை வேண்டி தோஷங்கள் நீங்கப் பெற்றனர். அவர்களுக்கு துணையாக வந்தவரே இங்குள்ள வீரபத்ரர் எனக் கூறுவர்.
அப்பய்ய தீட்சிதர் இத்தலத்திற்கு வந்து தமது கரங்களால் குளம் ஒன்றை அமைத்து, இவ்விறைவனை வழிபட்டுள்ளதாக குறிப்பொன்று கூறுகிறது. 1055 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் எனக் கூறப்படுகிறது.