சிவபெருமானை தரிசிக்க கயிலாயம் சென்ற நாரத முனிவர், தனக்குக் கிடைத்த அபூர்வமான மாங்கனி ஒன்றை சிவபெருமானிடம் தந்தார். அந்தப் பழம் தனக்கே வேண்டும் என விநாயகனும், முருகனும் கோரிக்கை வைத்தனர்.
உலகை முதலில் சுற்றி வருபவருக்கே இந்தப் பழம் தரப்படும் என்கிறார் மகேசன். உடனே முருகன் மயில் மீதேறி உலகைச் சுற்றி வரப் புறப்பட்டார். அம்மையப்பரே உலகம் என்பதால் அம்மையப்பரைச் சுற்றி வந்து விநாயகர் அந்தப் பழத்தைப் பெற்றுக் கொண்டார்.
உலகைச் சுற்றிவிட்டுத் திரும்ப வந்த முருகன், விநாயகர் பழத்தை வைத்துக் கொண்டிருப்பதால் தனக்குத் தரப்படமாட்டாது எனத் தெரிந்து கொண்டு கோபமுற்று, ஆண்டிக் கோலம் பூண்டு, இந்த மலை மீது வந்து நின்று கொண்டார்.
'பழமே நீ! உனக்கு ஒரு பழம் வேண்டுமா?' எனப் பெற்றோர்கள் சமாதானம் கூறியும், சினம் தணியாது இங்கு வந்து நின்றுகொண்டார் என ஸ்தல வரலாறு. 'பழம் நீ' என்பதே 'பழநி' என்று, ஊரின் பெயராக அமைந்தது.
சித்ரா பௌர்ணமியன்று வெள்ளித்தேர், வைகாசி விசாக விழா 10 நாட்களும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வயானை திருவுருவங்களை, நறுமண மலர்களால் மாலை தொடுத்துக் காலையும் மாலையும் அலங்கரிப்பார்கள். 6ஆம் நாளன்று திருக்கல்யாணம், 7ஆம் நாள் திருத்தேர்.
ஆடி மாதத்தில் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற தினங்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி - சூர சம்ஹாரம், கார்த்திகை விழா 10 நாட்கள்,
காலை 5.40 மணிக்கு விஸ்வரூப தரிசனம் (கட்டணம்), காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம், காலை 8.00 மணிக்கு வேடன் அலங்காரம், காலை 9.00 மணிக்கு பாலசுப்ரமண்யர் அலங்காரம், மதியம் 12.00 மணிக்கு வைதீகன் அலங்காரம், மாலை 5.30 மணிக்கு ராஜ அலங்காரம், இரவு 8.00 மணிக்கு புஷ்ப அலங்காரம் ஆகிய அலங்காரங்களில் தரிசிக்கலாம்.