சுரம் என்றால் குன்றுகளுடைய காடு எனப் பொருள். கல் மலைகளுக்கு இடையே அமைந்த கோவில் என்பதால் இடைச்சுரம் எனப் பெயர் கொண்டது. தற்போதையப் பெயர் திருவடிசூலம் என்பதாகும்.
கோ என்பது பசுவைக் குறிக்கும். காமதேனு பசு வடிவில் வந்த அம்பாள், அனுதினமும் இங்குள்ள லிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்வாள். இதனால் கோவர்த்தனாம்பிகை எனப் பெயர் கொண்டாள். அம்பாளின் பாலபிஷேக வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் மரகத லிங்கமாக காட்சி கொடுத்தார் என ஸ்தல வரலாறு.
புண்ய க்ஷேத்ரங்கள் பலவற்றிற்கு பயணித்துக் கொண்டிருந்த திருஞான சம்பந்தர் இத்தலமருகே வரும்போது பசியினாலும், வெயில் கொடுமையினாலும் துவண்டிருந்தார். தயிர்ப்பானை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்த இடையன் ஒருவன், ஞானசம்பந்தருக்கு தயிரைக் கொடுத்து பசியாற்றி விட்டு, வந்த நோக்கத்தை கேட்டறிந்தான்.
சிவாலயங்கள் சென்று வழிபட்டுக் கொண்டு வருவதை ஞானசம்பந்தர் விளக்கியதும், இவ்வுரிலுள்ள வனத்திலும் ஒரு சிவாலயம் இருக்கின்றது. வாருங்கள்.. என அழைத்துக் கொண்டு சென்றவன், குளக்கரை அருகே வந்ததும் மாயமாய் மறைந்து விட்டான்.
இடையனாக வந்து இடையிலேயே ஞானசம்பந்தரை விட்டுவிட்டதால் இடைச்சுரம் என்றானதோ?
இடையன் வடிவம் கொண்ட சிவபெருமானுடன் தானும் வரப் போவதாக பிடிவாதம் பிடித்தாள் அம்பிகை. இடது கால் முன்னால் வைத்து, வலது கால் பின்னால் வைத்து, நடக்க முற்படும் நிலைக்கு வந்தவளை தடுத்து நிறுத்தி விட்டார்.
முடியாது.. அவன் ஞானப் பால் குடித்தவன்.. உன்னை கண்டு பிடித்து விடுவான்.. நீ வர வேண்டாம்.. எனத் தடுத்து விடுகிறார் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்