ஜ்வரஹரேஸ்வரர்
சிவபெருமானின் 64 வகை வடிவங்களுள், ஜ்வரஹரேஸ்வரர் திருமேனியும் ஒன்று. பொதுவாக சிவன் கோவில்களில் உட்பிரகாரத்தில் இடப்பக்கம், சப்த மாதர்களை அடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார்கள். சில கோவில்களில் தனி சந்நிதி இருக்கும். ஆனால் இங்கோ மூலவரே ஜ்வரஹரேஸ்வரர்தான்.
இவர் மூன்று தலைகள், நான்கு கரங்கள், மூன்று பாதங்கள் கொண்டு காட்சி தருவார். பின்னிரு கரங்களில் அக்னியும் உடுக்கையும் இருக்கும். முன்னிரு கரங்களில் போரிடும் கோலத்தில் சூலத்தை ஏந்தியிருப்பார். மூன்று கால்களில் இரண்டு சமநிலையாக இருக்க, மூன்றாவது சற்று தூக்கிய நிலையில் இருக்கும். ஒரு சில சிலைகளில் நான்கு கரங்களில் திரிசூலம், மான், மலர், மணி போன்றவற்றை வைத்திருப்பார்.
ஸ்தல வரலாறு
தினகர முனிவரின் பராமரிப்பில் இருந்த மான் ஒன்றை அம்பு எய்து கொன்றுவிட்டான் சோழ மன்னன். அந்த மான் பூமியில் சாயும்போது போட்ட தீனசுரமான குரல் முனிவரின் காதில் விழுந்தது. வருத்தம் கொண்ட முனிவர், மானைக் கொன்றவன் ஜ்வரம் பிடித்தலையக் கடவது என சபித்துவிட்டார்.
க்ஷேத்ராடனம் போய்க் கொண்டிருந்த சோழ மன்னன் இத்தலமருகே வரும்போது நோய்வாய்ப்பட்டு அவதியுற்றான். பின்னர் இவ்விறைவனை வழிபட்டு நலம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
இன்றும், கடும் காய்ச்சல் கொண்டவர்கள், இவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, நோய் நீங்கப் பெறுகின்றனர். மிளகு ரசம் நைவேத்யம் செய்கின்றனர்.