மஹாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்ற நந்தி தேவர், துவாரபாலகர்களான ஜயன் - விஜயன் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முற்பட்டதால் அவர்கள் தடுத்தனர். தடுத்தவர்களிடம் தர்க்கம் செய்து, அவதியுறுமாறு சபிக்கப்பட்டார். சாப விமோசனம் வேண்டி திருமாலை நோக்கி நீண்ட தவம் மேற்கொண்டார் நந்தி தேவர். பிரத்யட்சமான திருமாலிடம் பிரார்த்தித்து சாபத்தைப் போக்கிக் கொண்டார் நந்தி தேவர் என ஸ்தல வரலாறு.
மஹாலட்சுமி இத்தலத்திற்கு வந்து செண்பக மரத்தடியில் அமர்ந்து கடுந்தவம் புரிந்து, திருமாலையே மணம் புரிகின்றார். ஸ்ரீயாகிய திருமகளை மணந்ததால் ஸ்ரீநிவாசன் என்றும், திருமகளின் நாதன் ஆனதால் நாதன் என்றும் திருநாமங்கள் கொண்டார்.
நந்தி வழிபட்டு பலன் பெற்ற ஸ்தலமாதலால் நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் வந்தது.
புறாவிற்கு நியாயம் வழங்க தராசுத்தட்டில் தானே ஏறி உட்கார்ந்து உயிர் துறந்த சிபி சக்கரவர்த்தியின் செயலைக் கண்டு அதிசயித்து, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கே திருமுகம் கொண்டதாகக் கூறுகின்றனர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.