ஜெகவீர பாண்டியனின் அமைச்சராக இருந்த தெலுங்கு பேசும் பொம்மு என்பவர் வீரம் மிகுந்தவர். அவரது வீரத்தைக் குறிப்பிட, 'கெட்டி பொம்மு' என்றழைத்தனர். அதுவே மருவி, தமிழில் 'கட்டபொம்மன்' என்றானதாகக் கூறப்படுகிறது.
வீரம் விளையும் மண்ணாகப் போற்றப்படும் பாஞ்சாலங்குறிச்சி ஊரில், ஏழு நாய்களை ஒரு முயல் துரத்திய சம்பவம் நிகழ்ந்தது என்பர்.
ஜெகவீர கட்டபொம்மன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு 1760ஆம் ஆண்டு பிறந்தவன் கட்டபொம்மன். 47வது பாளையக்காரராக ஆட்சி புரிந்து வந்தான். துணைவியின் பெயர் வீர ஜக்கம்மாள்.
ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த கட்டபொம்மனின் வீரம் சரித்திரம் படைத்துள்ளது.
1799ல் பானர்மென் எனும் வெள்ளைக்காரத் தளபதியால் கட்டபொம்மனின் கோட்டை பிடிக்கப்பட்டுப் பின்னமாக்கப்பட்டது.
16.10.1799ல் கயத்தாறு என்னும் இடத்தில் கட்டபொம்மனை பானர்மென் தூக்கிலிட்டான்.
1959ல் திரு. சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' எனும் திரைப்படம் பலராலும் பார்க்கப்பட்டுச் சாதனை படைத்தது. ஆப்ரோ ஆசியன் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு உயரிய விருதினைப் பெற்றுத் தந்தது.
1974ல் முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதி, கட்டபொம்மனின் கோட்டையின் வடிவிலேயே ஒரு நினைவுச் சின்னக் கோட்டையை எழுப்பினார்.