அர்ச்சாவதார மூர்த்திகளுள் மிகவும் அழகு வாய்ந்தவர் திருநாகை எம்பெருமான். இவரது பேரழகில் மயங்கிப் போன ஆழ்வார், "அச்சோ வொருவ ரழகியவா" என முடியும் பாசுரத்தைப் பாடியுள்ளார்.
பாற்கடலைக் கடையும்போது அமிர்த மதன காலத்தில் தோன்றிய ஆலகால விஷம், திருமாலின் அழகிய மேனியை நீலநிறமாக ஆக்கிவிட்டது எனப் புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுத் தம் மேனி திரும்பப் பெற்றார் என்று கூறப்படுகின்றது.
கிருத யுகத்தில் நாகர்களின் தலைவன் இங்கு தவமிருந்தான். அவனது தவத்தினால் மகிழ்ந்து பிரத்யட்சமான பெருமாள், அவனைத் தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டார் எனக் கூறுவர். (ஆதிசேஷன்) நாகர் தலைவன் வரம் பெற்றதினால், நாகர் பட்டினம் எனப் பெயர் பெற்ற இவ்வூர் காலப்போக்கில் மருவி நாகப்பட்டினம் என்றானதாகக் கூறப்படுகின்றது.
துருவன் எனும் அரசகுமாரன் மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சி, சௌந்தர்யமான கோலத்துடன் பிரத்யட்சமானார் எம்பெருமான். அவருடைய அழகில் மயங்கிய துருவன், வரம் கேட்க இருந்ததை விடுத்து, இந்த சௌந்தர்ய ரூபத்தை எப்போதும் காணும் பாக்கியம் ஒன்றே போதும் என வேண்டினான். துருவனுக்கு சேவை சாதித்த கோலத்திலேயே இங்கு எழுந்தருளியுள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆதிசேஷன் உண்டாக்கிய தீர்த்தம் உள்ளது.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.