சிவபெருமானின் நடனத்தைக் காண ஆசைப்பட்ட ஆதிசேஷன், பூமியில் மானிடனாகப் பிறந்து நடனத்தைக் கண்டு ரசிக்க, சித்தம் கொண்டு இறைவனை வேண்டினார். அதே வேளையில், தமக்கு குழந்தை வேண்டுமென்று சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அத்ரி முனிவரின் பத்தினியான அநுசுயை கரத்தில் ஒரு குட்டிப் பாம்பாகப் பிறந்து விழுந்தது. பாம்பு என கையை உதறிய அநுசுயை தேவியின் பாதத்தில் பட்டு, அத்ரி முனிவரின் பாதத்தில் விழுந்து குழந்தையாக மாறியது அந்தக் குட்டிப் பாம்பு.
இறைவனின் அருளால் கிடைத்த அக்குழந்தைக்கு பதஞ்சலி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். பதம் என்றால் பாதம், சலித்தல் என்றால் விழுதல் எனப் பொருள். சிறு வயதிலிருந்தே சிவநாமங்களைக் கூறிக் கொண்டு, சிவ பூஜைகளைச் செய்து வந்தார் பதஞ்சலி.
சிவபெருமானின் தரிசனமும் கிடைத்து, நடனத்தைக் காணும் பாக்யமும் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று சேஷமூலை. சேஷனாகிய பதஞ்சலி வழிபட்டதால் இவ்வூர் சேஷமூலை எனவும், இறைவனுக்கு சேஷபுரீஸ்வரர் எனவும் பெயர் வந்தன.
திருநள்ளாற்றில் தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசித்து பின்னர், இத்தலம் வந்து இவ்விறைவனுக்கு இலுப்பை எண்ணையால் தீபம் ஏற்றி வழிபடுவது சம்ப்ரதாயமாக உள்ளது.
அம்பாள் இங்கு கல்யாணசுந்தரியாக காட்சி தருவதால், திருமணத்தடை விலக பிரார்த்திக்கின்றனர்.