சிம்ம வாஹினியாக சக்தி கோவில் கொண்டுள்ள ஸ்தலம் என்பதால் சிங்கம் - பிடாரி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சிங்கம்புணரி என்றானதாக கூறப்படுகிறது. ஆதியில் அடர்ந்த காடுகள் இருந்த பகுதியாக விளங்கியதாலும், சிங்கங்கள் மிகுந்திருந்ததாலும் இவ்ஊருக்கு சிங்கம்புணரி எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
சங்ககாலத்தில் பாரி வள்ளலின் புறம்பு நாட்டு ஊர்களில் ஒன்றாக இருந்தது. பாரிவேட்டை, புரவியெடுப்பு, கழுவன் திருவிழா ஆகியவற்றை மரபுகளாக கொண்டிருந்த ஊர். சமணர்களை கழுவேற்றிய நிகழ்ச்சியை கழுவன் திருவிழா என்பார்கள்.
ஐந்து நிலை நாடுகளின் உட்பிரிவாக ஐந்து மங்கலங்களாக பிரிக்கப்பட்டு பின் அஞ்சுமங்கலம் என அழைக்கப்பட்டு இப்போது அஞ்சல்நாடு எனப்படுகிறது. தென்னைமட்டை நாரைக் கொண்டு கொச்சைக்கயிறு தயாரிக்கும் தொழில், பிரதானமாக நடைபெறும் ஊராக விளங்குகிறது. கோவில் மாடுகள் பிரசித்தம்.