இத்தலத்திற்கு வந்த மார்க்கண்டேயர் தன்னுடைய பிறவிக்கடன் நீங்குவதற்காக சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். அந்த லிங்க வடிவமே ருண விமோசனர். 'ருணம்' என்றால் கடன் எனப் பொருள். பிறப்பிலிருந்து இறப்பு வரை நாம் எதிர்கொள்ளும் பலவித கடன்களை தீர்த்து வைக்கும் ருண விமோசனர், தேவகடன், ரிஷி கடன், பித்ரு கடன், லௌகீக கடன் ஆகியவற்றையும் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.
பிறவித் துன்பத்தை நீக்கி முக்தியை வழங்கும் இறைவன் என்பதால் செந்நெறியப்பர் என்ற திருநாமம் கொண்டார். தௌமிய மகரிஷி இவரை வழிபட்டு முக்தி அடைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிவபெருமானை அழையாது, தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க சூரியன் இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான்.
நான்கு மாதங்கள் வெறும் இலைகள், நான்கு மாதங்கள் பூக்கள், நான்கு மாதங்கள் ஒன்றுமில்லாத வெற்று மரம் - என வித்தியாசங்களைக் கொண்டுள்ள அதிசய மரமான மாவிலங்கை ஸ்தல விருட்சமாக உள்ளது. இதனைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
மார்க்கண்டேய தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளத்தில் ஒரு துளி அமிர்தம் சிந்தியதாக ஸ்தல வரலாறு. இதனால் 'பிந்து சுதா' என அழைக்கின்றனர். இதை ப்ரோட்சணம் செய்து கொள்வதால் சகல பாபங்களும் நீங்கும்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.