பயிர்களை அழிக்கும் விலங்குகளை வேட்டையாடச் சென்ற சோழ மன்னன் ஒருவன் இவ்வூர் வயல்கள் வழியே செல்லும்போது தாகம் ஏற்பட்டது. அங்கு விளைந்திருந்த கரும்பு ஒன்றை பிடுங்கினான். மூன்று தோகைகளுடன் கூடிய அந்த கரும்பை வெட்ட முற்பட்டபோது அதிலிருந்து ரத்தம் பெருகியது.
கவலையுற்ற மன்னன் கரும்பு வளர்ந்திருந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான். சிவலிங்கம் புதையுண்டிருப்பது தெரிய வந்தது. அதை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக வரலாறு.
விராலிமலையில் இருந்த அருணகிரிநாதரை வயலூர்க்கு வா என அழைத்த முருகன் திருப்புகழ் பாடும்படி பணித்தான். மயில், வடிவேல், கடம்ப மலர், சேவற்கொடி, திருவடி, பன்னிரு கரங்கள், வயலூர் ஆகியவற்றை வைத்து அருணகிரியார் பாடியதாக வரலாறு.
அக்னி இறைவனை வழிபட்டதால் மூலவர்க்கு அக்னீஸ்வரர் என்றொரு திருநாமம். முருகன் தனது தேவியர்களுடன் தாய் - தந்தையர்களான பார்வதி - பரமேஸ்வரனை வழிபட்ட ஸ்தலம். கிருபானந்தவாரியார் திருப்பணிகள் பல செய்த ஸ்தலம்.
பால்குடம் தூக்கி வருதல், தேரோட்டம், தெப்ப உற்சவம் ஆகிய விழாக்களுடன் விசேஷமாக தொடங்கும் பிரம்மோற்சவம் வைகாசி மாதத்தில் 12 நாட்கள் சிறப்புற நடக்கும். ஆனியில் அருணகிரிநாதர் விழா. ஐப்பசியில் கந்த சஷ்டி பெரு விழா 7 நாட்கள் நடைபெறும். சூர சம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியன நடத்திக் காட்டுவர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர விழாக்கள் சிறப்புற நடக்கின்றன.