சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் நாம் தரிசிக்கும் மயில் மீதமர்ந்த ஆறுமுகனை உருவாக்கியவர் ஒரே சிற்பி.
சிக்கல் சிங்காரவேலனை வடித்தபோது, இது போன்ற அழகிய சிலை செய்வித்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என நினைத்த முத்தரச சோழன், அதை உருவாக்கிய சிற்பியின் கட்டைவிரலை எடுத்து விட்டான். இழந்த கட்டைவிரலுடன் சிற்பியால் வேறு எங்கும் சிலை செய்ய முடியாது என நினைத்தான். கட்டைவிரலை இழந்தும், இது போன்ற மற்றொரு அழகிய சிலையை, எட்டுக்குடியில் உருவாக்கினான் சிற்பி. கோபம் கொண்ட மன்னன் சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான்.
மனம் நொந்து போன சிற்பி, இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான். தான் புதியதாக வடிக்க நினைத்த ஆறுமுகனின் திருவுருவத்தை தன் மனக்கண் முன் நிறுத்தினான். அந்த மானசீக திருவுருவத்தை வடிக்கலானான். அவனது பேத்தியான சிறுமி ஒருத்தி துணை நின்றாள். இரண்டு கண்களும் இல்லாமலேயே, அவன் செய்த சிலை மிகவும் நன்றாகவும், உயிரோட்டம் கொண்டதாகவும் அமைந்தது.
அனைவராலும் பாராட்டப்பட்ட, தான் வடித்த இந்த ஆறுமுகனின் திருவுருவத்தை பார்க்க தனக்கு கண்கள் இல்லாமல் போய் விட்டதே என ஏங்கினான். சிலை முழுவதுமாக முடித்து, சிலையின் கண்களை திறக்க முற்பட்டபோது, முருகன் அருளால் இழந்த கண்களையும் கட்டை விரலையும் பெற்றான்.
கோவில் வாசலில் உள்ள வன்னி மரத்தடியில் சித்தியடைந்தான். சில்ப முனிவரின் உருவம் காணலாம்.
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறை வைத்த முருகனை, மீண்டும் ஸ்ருஷ்டி தொழில் செய்ய வேண்டி தனது எட்டுக் கண்களால் பூஜை செய்தார் பிரம்மன். அதனால் எண்கண் என இவ்வூருக்கு பெயர் வந்ததாகக் கூறுவர். எனினும் இழந்த இரண்டு கண்களை சிற்பிக்கு திரும்ப கிடைக்கப்பெற்ற ஸ்தலம் என்பதால் எண்கண் எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
பிருகு முனிவரின் சாபத்தினால் சிங்கமுகம் கொண்ட சிம்மவர்மன் தனது சிங்கமுகம் நீங்கி சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம்.