"எமது சுதர்சன சக்கரத்தை கழற்றி விடுவேன், அது பூமியில் எங்கு இறங்கி தங்குகிறதோ, அங்கு பிரத்யட்சமாவேன்" என்று வியாக்ரபாதருக்கு வாக்களித்திருந்தார் ஸ்ரீமந் நாராயணன். அதன்படி சுதர்சன சக்கரம் வந்து இறங்கிய இத்தலத்தில் சுந்தரவல்லி நாச்சியாருடன் கோயில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சுதர்சன சக்கரம் வந்து விழுந்த இடம் என்பதால் இவ்வூருக்கு ஆதியில் சுதர்சனபுரி என்ற பெயர் இருந்தது.
மாடக்கோயில் அமைப்பைக் கொண்ட இக்கோயிலின் முன்பாக சுதர்சன சக்கரத்தாழ்வார் சிலா வடிவில் காணப்படுகிறார்.
திருமழிசை ஆழ்வார் இவ்வூருக்கு வருகை தந்தபோது, வேத பாராயணக்காரர்கள் சிலர் திண்ணையில் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். ஆழ்வார் இவர்களை கடந்து செல்கையில், வேற்று மனிதர் காதில் வேதம் ஓதுவது விழக்கூடாது என ஓதுவதை நிறுத்தி விட்டனர். ஆழ்வார் இதற்கு வருந்தாமல் நடையைத் தொடர்ந்தார்.
ஆழ்வார் சென்றதும் வேத பாராயணத்தை தொடர முயன்று, விட்ட இடம் மறந்து போனதால், தடுமாறிக் கொண்டிருந்தனர். மௌன விரதத்தில் இருந்த திருமழிசை ஆழ்வார் கீழேயிருந்து ஒரு கருப்பு நெல்லை எடுத்துக் கிள்ளி உரித்துக் காண்பித்தார். "கிருஷ்ணானாம் வ்ரீஹீணாம் நகநிர்ப் பின்னம்" என்ற இடமே அவர்கள் தொடர வேண்டிய சொற்றொடர் ஆகும். மறந்து போய் விட்ட இடத்தை செய்கையாலேயே காண்பித்ததால் வந்திருப்பவர் ஒரு மகான் என பாராயணக்காரர்கள் உணர்ந்தனர்.