விஷ்ணுசர்மா என்பவருக்கு புத்திரனாகப் பிறந்த பிரம்மன் - சிவயோகி எனும் பெயர் கொண்டு, தம்முடன் பிறந்த எழுவருடன், இங்கு நீண்ட காலம் தவமிருந்தார். ஒரு சிவராத்திரி தினத்தன்று, தானும் தன்னுடன் பிறந்த எழுவருடனும் சிவலிங்க மூர்த்திக்குள் புகுந்து ஐக்கியமானார். இதன் அடையாளமாக சிவலிங்கத்தின் திருமுடியில் எண்மரின் சடைகளைக் காணலாம்.
யமனை உள்ளே வராமல் தடுக்க நந்தியம்பெருமான் வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம். ஆகவே யமபயம் நீக்கும் ஸ்தலமாக இது கருதப்படுகிறது. சிவயோகிநாதரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள். சனியின் ஆதிக்கத்தையொட்டி, 30 ஆண்டுகளாகப் பகுத்து, 30 ஆண்டுகளுக்கு ஒரு பைரவர் வீதம், நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர். இவர்களே சதுர்கால பைரவர்கள்.
அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களும், அஷ்டமி திதியன்று சதுர் ஷஷ்டி (8 x 8) பைரவ சக்திகளாக மாறி நம்மைக் காப்பதாக ஐதீகம்.
வன்னி, புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, புரசு, வில்வம் ஆகிய எட்டு விருட்சங்கள். இதில் நெல்லி மரம் விஷ்ணு பகவானால் நடப்பட்டது.
தேவார வைப்புத்தலம்.