ஸ்தல வரலாறு
சீயகங்கன் என்பவன் ஆட்சி புரிந்த ஊர். கங்கர்கள் ஆண்ட பகுதி என்பதால் காங்கேயம் எனப்பட்டது. காங்கேயன் என்றழைக்கப்பட்ட முருகன் கோவில் கொண்ட ஊர் என்பதால் காங்கேயம் எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
நவவீரர்கள் எழுந்தருளியிருப்பதால் வீரமாபுரம் அல்லது வீரை என்றழைக்கப்பட்டது. முருகனிடம் உபதேசம் பெற்ற சிவவாக்யர் இங்கு கோவில் அமைத்ததால் சிவன்மலை என்ற பெயரைக் கொண்டது.
சிவன்மலை சூழ் பகுதிகளில் கிடைக்கப் பெற்ற பலவித வண்ணக் கற்களை ரோமாபுரி நாட்டுப் பெண்கள் விரும்பி அணிந்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆலம்பாடி காட்டம்மை, பாப்பினி அங்காள பரமேஸ்வரி, காங்கேய ஆயி, வலுப்புரமன், தங்கம்மன், அத்தனூரம்மன், கரிய காளியம்மன், செல்வநாயகி ஆகிய அஷ்ட துர்க்கைகள் சிவன் மலையின் எட்டு திக்குகளிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவன்மலைக்கு அருகேயுள்ள பட்டாலியூரில், வேடுவர்களின் கண்காணிப்பிலிருந்த வள்ளியை முருகப்பெருமான் சிறை எடுத்து வந்து இம்மலையில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வருகையில் சிறு துண்டு ஒன்று இங்கு விழுந்து சிவன்மலையானதாகக் கூறப்படுகிறது.
மலையடிவாரத்தில் கிரிவலம் வருகையில் சிவாலயத்தைத் தரிசிக்கலாம். ஆஞ்சநேயர் சிவனாரை வழிபட்ட ஸ்தலம் என்பர். ஆஞ்சநேயரின் திருவுருவத்தைச் சேவிக்கலாம்.