க்ஷேத்ரம், பெருமாள், தாயார், விமானம், தீர்த்தம் - ஆகிய ஐந்தும் சார எனும் அடைமொழியுடன் ஆரம்பிப்பதால் பஞ்ச சார க்ஷேத்ரம் எனப்படுகிறது.
கல்ப முடிவில், நான்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஆவாஹனம் செய்து பரதக் கண்டத்தில் ஸ்தாபனம் செய்யும் பணியில் பல ஸ்தலங்களுக்கும் சென்று மண் எடுத்து குடம் செய்து அதனுள் இவற்றை ஆவாஹனம் செய்ய முற்படும்போது, குடங்கள் விரிசலடைந்தன.
பின்னர் மஹாவிஷ்ணுவின் யோசனையின் பேரில் சார புஷ்கரிணியில் மண் எடுத்து, குடம் செய்து வேதங்களை ஆவாஹனம் செய்தார். குடம் விரிசலடையாமல் இருந்தது. குடம் செய்வதற்கு சேறு தந்ததால் - சேறு தந்த ஊர் - சேறையூர் என்றாகி தற்போது திருச்சேறை என்றழைக்கப்படுகிறது.
கங்கையை விட உயர்ந்த ஸ்தானம் - அதாவது கங்காதிக்யம் வேண்டிய காவேரி இத்தலத்திற்கு வந்து சார புஷ்கரிணிக் கரையில் உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து தவமியற்றினாள். அப்போது சர்வ அலங்காரங்களுடன் கூடிய அழகிய குழந்தை ஒன்று அவள் முன்பாக தவழ்ந்து சென்றது. ஒளி வீசும் அழகிய குழந்தையை (மா மதலை) கண்டதும் காவேரி, சுயரூபம் காட்ட வேண்டினாள். கருடாரூடராய் சேவை சாதித்த மாமதலைப் பிரான் காவேரிக்கு கங்காதிக்யம் வழங்கினார். அவள் விரும்பியபடி இந்த க்ஷேத்ரத்திலேயே தங்கி சேவார்த்திகளுக்கு சேவை சாதிப்பதாக ஸ்தல வரலாறு.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச சார க்ஷேத்ரம்.