இவ்வாலயத்தில் சிவபூஜை செய்து வந்த அர்ச்சகருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் சுசீலையை சம்புநாத சர்மா
என்பவர் மணந்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு உடனே காசி யாத்திரையும் சென்று விட்டார்.
கணவன் தீர்த்த யாத்திரை போன பிறகு, சில நாட்கள் கழித்து, சுசீலையை வைசூரி தாக்கியதால் கண் பார்வை பறிபோனது. பொலிவிழந்து குரூபியாக மாறி காணப்பட்டாள்.
பல மாதங்களுக்கு பிறகு காசி யாத்திரை சென்ற கணவன் ஊர் திரும்பினான். குரூபியாக இருப்பவள் தன் மனைவியே
இல்லை என்றும், அருகே நின்ற அவளது தங்கையைக் காட்டி அவள்தான் தனது மனைவி என்றும் வாதிட்டான்.
பெற்றோரும் உற்றோரும் கூறுவதை ஏற்கவில்லை.
அப்போது இறைவன் ரிஷபாரூடராய் எழுந்தருளி நீ அந்நாளில் மணந்து கொண்ட அவள் - இவளே என குரூபியாக
இருந்த மூத்தவளை அடையாளம் காட்டினார். ஆலயத்தின் எதிரே இருந்த புஷ்கரிணியில் சுசீலையை நீராடச் செய்து,
இழந்த கண் பார்வையையும் அழகையும் மீண்டும் கொடுத்தருளினார் என ஸ்தல வரலாறு.
இந்நிகழ்வு தை அமாவாசையன்று நடந்ததால், ஆண்டுதோறும் தீர்த்தவாரி தை அமாவாசையில் நடக்கின்றது. அப்போது
சாட்சிநாதர் தனது பரிவாரங்களுடன் எழுந்தருளுவார்.
அவள் - இவளே எனக் காட்டியதால் இவ்வூருக்கு அவளிவநல்லூர் எனப் பெயர் வந்தது. ஸ்வாமிக்கு சாட்சிநாதர் என்ற
பெயர் வந்தது.
வராஹ அவதாரத்தின்போது சிவபெருமானால் கொம்பு முறியப் பெற்ற விஷ்ணு மூர்த்தி பூஜித்த ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம் - பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களுள் ஒன்று.