சூர சம்ஹாரம் முடிந்து, பின் இந்திரனின் மகள் தெய்வயானையை முருகப் பெருமான் மணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு வந்த சிவபெருமானும் பார்வதி தேவியும், சோலைகள் சூழ்ந்த இந்த ஸ்தலத்தில் தங்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அப்போது உமையவள் வேதங்களின் விளக்கமாக திருமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டினாள். திருமந்திர உபதேசம் பெற்ற ஸ்தலம் என்பதால் 'திருமந்திர நகர்' எனப் பெயருற்றது.
ஸ்ரீ ராமரால் பூஜிக்கப்பட்ட இறைவன் என்பதால் இவ்விறைவனுக்கு 'சங்கர ராமேஸ்வரர்' என்ற பெயர். இத்தலத்தில் வீரபாகு ஸ்வாமியை வழிபட்டு சூரபத்மனிடம் தூது சென்றதால் 'தூதுகுடி' எனப் பெயருற்று, பின் மருவி 'தூத்துக்குடி' என்றானதாகக் கூறப்படுகிறது.
கிணறுகள் எல்லாம் தூர்ந்து போய் தண்ணீர் தட்டுப்பாடு வருமாம். தூர்வாரி தூர்வாரிதான் தண்ணீர் இறைப்பார்கள். இதனால் 'தூத்துக்குடி' எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.
மேலூர், கீழூர் என இரண்டு பகுதிகளாக உள்ள இவ்வூரில், மேலூரின் நடுவே இக்கோவில் அமைந்துள்ளது.