பாற்கடல் கடையும்போது மிதந்து வந்த அமுதத்தை திரட்டிய திருமால், அதை பராசர முனிவரிடம் அளித்தார். பவானி ஆற்றங்கரையில் அமுதக் குடத்தை புதைத்து வைத்தார் பராசரர். இதை அபகரிக்க முற்பட்ட அசுரர்களை சிவபெருமான் உதவியோடு விரட்டி அடித்தார். சிறிது காலம் பொறுத்து பராசரர், ஆற்றங்கரையை தோண்டிப் பார்த்தபோது அமுதகுடம் லிங்கமாக மாறிவிட்டிருந்தது. லிங்கத்தை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் பராசர முனிவர் என ஸ்தல வரலாறு.
லிங்கம் இருந்த இடத்திலிருந்து ஊற்று கிளம்பி காவிரி மற்றும் பவானியுடன் கலந்து கொள்கிறது. இந்த ஊற்றை அமுத நதி என்பர்.
வழிபடுவோர்க்கு ஒரு தீங்கும் நண்ணாத (அணுகாத) ஸ்தலமாக இருப்பதால் நணா என்ற பெயரைக் கொண்டது. அம்பாளின் பெயர் பவானி மற்றும் பவானி ஆறு ஓடுவதால் இவ்வூர் பவானி என்ற பெயரைக் கொண்டது.
சங்ககிரி, நாககிரி, மங்களகிரி, வேதகிரி மற்றும் பத்மகிரி ஆகிய ஐந்து மலைகளைக் கொண்ட ஸ்தலம் என்பதால் பஞ்சமலை க்ஷேத்ரம் என்பார்கள்.
ஆண்டிற்கு ஒரே பழம் பழுக்கும் இலந்தை மரம் இத்தலத்திலுள்ளது. அதிலிருந்து கீழே விழுந்த பழத்தை சோழ அரசி ஒருவர் எடுத்து சாப்பிட்டாள். பிள்ளை வரம் கேட்டு இத்தலம் வந்தவள், அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
வெள்ளைக்கார துரை கலெக்டர் வில்லியம் கேரோ என்பவர் அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். கோவிலுக்குள் நுழைய தடை இருப்பதால் சந்நிதியின் எதிரிலுள்ள மதிற்சுவரில் மூன்று துளைகள் செய்து அதன் வழியே தரிசித்து வந்தார். ஒரு நாள் இரவு அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது, சிறுமி ஒருத்தி கனவில் வந்து அவரை வெளியே ஓடுமாறு கூறினாள். அதன்படியே அவர் வெளியே ஓடி செல்ல, மேற்கூரை இடிந்து விழுவது கண்டு பயந்தார். சிறுமியாக வந்து தன்னை காப்பாற்றிய அன்னை பவானிக்கு தந்தக்கட்டில் ஒன்றை வழங்கியுள்ளார். பல்லக்கு போன்ற ஊஞ்சல் அமைப்பை கொண்டது.
அமாவாசை, கிரகண தினங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு ஆராதனைகள் உண்டு. தினமும் கோபூஜை செய்கின்றனர்.
தேவாரத்திருத்தலம்.