குடந்தை காவிரிக் கரையில், தன்னுடைய ஒளியை மிஞ்சும் அளவிற்கு பேரொளி வீசுவதைக் கண்ட சூரிய பகவான், போட்டியாக வந்துள்ளவர் யார் என அறிய முற்பட்டான். பேரொளிக்கு காரணமானவர் சுதர்ஸன சக்ரத்தாழ்வார் என தெரிந்து கொண்டான்.
இரண்டு ஒளிக்கிரணங்களின் உஷ்ணத்தால் உலகிலுள்ள உயிர்களும் பயிர்களும் நாசமாவதை கண்ட பிரம்ம தேவர், சீற்றம் தணியும்படி இருவரையும் வேண்டினார்.
தனது ஒளிக்கிரணங்களை சுருக்கிக் கொண்டார் சுதர்ஸனர். சூரியன் அவ்வாறு செய்ய மறுத்து விட்டார். சூரியனது அகங்காரத்தை அவனுக்கு உணர்த்த வேண்டி அவனது ஒளி அனைத்தையும் தன்னுள் ஒடுக்கி, சூரியனை கரிக்கட்டை ஆக்கிவிட்டார் சுதர்ஸனர். தனது பிழையை பொறுத்தருள வேண்டிய சூரியன், இங்கே தவமிருந்து சுதர்ஸனரை வழிபட்டு மீண்டும் தனது ஒளிக்கிரணங்களை பெற்றான் என ஸ்தல வரலாறு.
சுதர்ஸனருக்கு கட்டுமலை மீது கோவிலெடுத்து வழிபட்ட சூரியன், வைசாக பௌர்ணமியில் சக்கரபாணியை எழுந்தருளச் செய்து ஒன்பது நாட்கள் விழா கொண்டாடினார் என ஸ்தல வரலாறு.
ஜலந்திரன் எனும் அசுரனை அழிக்க சாரங்கபாணியிடமிருந்து வெளிப்பட்ட சக்ராயுதம் அசுர சம்ஹாரம் முடித்து, இங்கு தனிக் கோவில் கொண்டதாக கூறப்படுகிறது.
சக்கர தீர்த்தத்தில் மூழ்கினால் காசியை விட ஸ்ரேஷ்டம் என்பர்.