தஞ்சை அரசர், இந்த கிராமத்தை, பண்டிதர்களுக்கு தானமாக கொடுத்ததால் ஏகாதசி கிராமம் என வழங்கலாயிற்று.
வகுளாரண்யம், பாஸ்கர க்ஷேத்ரம், தட்சிண அயோத்தி என்றெல்லாம் போற்றப்படும் ஊர் வடுவூர்.
ஓவியத்து எழுதவொண்ணா உருவத்தாய் என்று வாலியின் மூலம் கம்பன் புகழ்ந்த ஸ்ரீ ராமரின் வடிவம் தரும் வடிவழகால் வடிவு - ஊர் எனப் பெயருற்று பின்னர் மருவி வடுவூர் என்றானதாக கூறப்படுகிறது.
ஸ்ரீ ராமன், தண்டகாருண்யத்தில் எழுந்தருளி, பின்னர் அங்கிருந்து புறப்படும்போது, அவரை போகக் கூடாதென வேண்டி நின்ற முனிவர்களை சந்தோஷப்படுத்த, தன்னைப் போன்ற வடிவுள்ள சிலையை தந்துவிட்டு சென்றார்.
ஏதோ ஒரு கலகம் விளைந்தபோது இந்த விக்ரஹத்தையும், இதர மூர்த்திகளையும் தலைஞாயிறு எடுத்துச் சென்று, பூமியில் புதைத்ததாகவும் பின்னர் தஞ்சை மன்னன் கனவில் தோன்றிய ராமர், தாம் புதையுண்டு இருக்கும் இடத்தை தெரியப்படுத்திவிளக்கியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
தஞ்சை மன்னன் அவற்றை தோண்டி எடுத்து வெளிக்கொணர்ந்து, தஞ்சைக்கு எடுத்துப்போகும் வழியில் இங்கு தங்கினார். ராமனின் வடிவழகில் மயங்கிய இவ்வூர் மக்கள், ராமரை இங்கு பிரதிஷ்டை செய்யாது எடுத்துப் போனால், மொட்டைக் கோபுரத்திலிருந்து குதித்து உயிரை விடுவோம் என மன்றாடினர். தஞ்சை மன்னனும் சிலைகளை இங்கேயே விட்டுவிட்டு சென்றதாக செவி வழி கதை ஒன்று இருக்கிறது.
ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே .. .. ரகுநாதாய நாதாய சீதாயா: பதயே நம:
அபிமான ஸ்தலம்