ஹேரண்டம் என்றால் ஆமணக்கு. ஆமணக்கு செடிகள் மிகுதியாக இருந்ததால் ஹேரண்டபுரம் எனப் பெயர் கொண்டது. ஆமணக்கு கொட்டைச் செடியின் அடியிலிருந்து இறைவன் தோன்றியதால் இவ்வூர் கொட்டையூர் என்றானது. கொட்டைச் செடி எனும் ஆமணக்கு செடியின் கீழிலிருந்து லிங்கம் வெளிப்பட்டதாக ஐதீகம்.
ஹேரண்டம் எனப்படும் கொட்டை மரத்தினடியில் அமர்ந்து தவம் செய்பவர் ஹேரண்ட (அ) ஏரண்டமுனிவர் எனப் பெயர் பெற்றார். அத்ரி மகரிஷி மரபில் தோன்றியவர். ஆத்ரேயர் எனும் பெயரினர். இத்தலத்தில் மணலால் லிங்கம் ஒன்றை அமைத்து, அமுத கிணற்று நீரில் முழுக்காட்டி மகிழ்ந்து இறைவனை வழிபட்டவர்.
திருவலஞ்சுழி பகுதியில் ஆதிசேஷனால் நிலம் பிளவுபட்டு பாதாளம் உண்டாயிற்று. காவிரி ஆறு அந்த பாதாளத்தில் புகுந்து பூமிக்கு மேல் வராமல் போயிற்று. பாதாளத்திற்குள் ஒரு அரசனோ அல்லது முனிவரோ இறங்கி தம்மை பலியிட்டுக் கொண்டால், அவர்களை உள்வாங்கி காவிரியை வெளியே விடுவதாக அசரீரி வாக்கு ஒலித்தது.
பள்ளத்தில் இறங்க ஆயத்தமான அரசனை தடுத்து விட்டு, தாமே இறங்கி உயிர் தியாகம் செய்தார் ஏரண்ட முனிவர். உடனே பள்ளமும் மூடியது. காவிரியும் வெளி வந்தது. திருவலஞ்சுழி பள்ளத்தில் இறங்கிய முனிவர் கொட்டையூரில் வெளிவந்து கோடீச்வரரை வழிபட்டு முக்தியடைந்தார் என வரலாறு.
தேவாரத் திருத்தலம்.