தொண்டைமான் எனும் அரசன் போருக்கு புறப்பட்டு போகும் வழியில், பாதையிலுள்ள முல்லைக் கொடிகள் தனது யானையின் கால்களில் சிக்குண்டதை கண்டு, அதை தனது வாளால் அப்புறப்படுத்தலானான். வாள் வெட்டுப்பட்ட இடத்தில் ரத்தம் கசியவே, கொடிகளை விலக்கிப் பார்த்தான். கொடிகளினூடே சிவலிங்கம் ஒன்று இருப்பதை பார்த்து, அதை வெளிக் கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, கோவிலெழுப்பினான் என ஸ்தல வரலாறு.
சிவபெருமானின் கண்களை பொத்தியதால் சாபம் கொண்ட பார்வதி, இத்தலமருகே அமர்ந்து தவம் செய்யலானாள். அவளுடைய தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமான், வீரம் கிடைக்கும் என வரமளித்தார்.
இவ்வாலயத்து எருக்கந் தூண்களை கட்டிப் பிடித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த இரண்டு அசுரர்கள், அரசன் தொண்டைமானின் படைகளைத் துன்புறுத்தினர்.
நந்தியம் பெருமான் புறப்பட்டு, கொடியிடை அம்மனிடம் வாள் பெற்று, அசுரர்களை கொன்றதாக வரலாறு.
ஆலயத்தின் முன்பாக, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ மஹா கணபதி மிகப் பெரிய திருவுருவமாக உள்ளார். கோபுரத்து சிற்பங்கள் அனைத்தும் பேரெழில் கொண்டுள்ளன.
கொடியிடை நாயகிக்கு மாலை தரிசனம் விசேஷம்.
இது ஒரு தேவாரத்திருத்தலம் மற்றும் சக்தி பீடம்.