உரோமச முனிவர் தமது குருவான அகஸ்திய பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார். அதற்கு அகஸ்தியர், 'நீ தாமிரபரணி ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு' என்றார். (சங்கு முகம் என்பது தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்).
அகஸ்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூ கரை ஒதுங்கிய இடங்களில் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் ஸ்ரீ வைகுண்டம்.
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க, சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம். அதன்படி இங்கு சனீஸ்வரரின் அம்சமாக இறைவன் அருள் புரிகின்றார்.