உரோமச முனிவர் தமது குருவான அகத்திய பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார். அதற்கு அகத்தியர், "நீ பொருநை ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு" என்றார். (சங்கு முகம் என்பது பொருநை ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்).
அகத்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூ கரை ஒதுங்கிய இடங்களிலும் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். மிதந்து வந்த மலர்களுள் ஒன்பதாவது மலர் கரை ஒதுங்கிய இடமே சேர்ந்தபூமங்கலம்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம். அதன்படி இங்கு சுக்கிரனின் அம்சமாக இறைவன் அருள் புரிகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரபலம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் சுக்கிர தோஷம் கொண்டவர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
ஸ்ரீ கைலாசநாதருக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வில்வார்ச்சனை செய்து, நீராஞ்சன தீபத்தில் ஒன்பது திரிகளை போட்டு தீபமேற்றி வழிபட்டால், சுக்கிர யோகம் கிடைக்கும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
ஆறு கடலோடு சங்கமிப்பதாலும், மலர் ஆற்றின் கரை ஒதுங்கியதாலும் இவ்வூருக்கு சேர்ந்தபூமங்கலம் என்ற பெயர் வந்தது. கல்வெட்டில் இவ்வூரை குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த மங்கலம் என்றும் அவணீய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.