சிவதரிசனம் பெற்று முக்தியடைய விரும்பிய உரோமச முனிவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய எண்ணிய அவரது குரு அகஸ்தியர், ஒன்பது மலர்களைத் தாமிரபரணியில் மிதக்க விட்டார். அந்த மலர்கள் எங்கெல்லாம் சென்று கரை ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு பணித்தார். அவ்வாறே ஒன்பது இடங்களில் ஒன்பது லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் உரோமச முனிவர். இவையே நவ கயிலாயங்கள்.
இவற்றுள் நான்காவது மலர் சென்று கரை ஒதுங்கிய இடமே குன்னத்தூர். நவகோள்கள் ஒவ்வொன்றும் நவ கயிலாயங்களில் ஆட்சி செலுத்துவதாக ஐதீகம். கிரகாதிபதிகள் ஆதிக்கம் பெற்று இருப்பதால் இங்கு ராகுவின் ஆதிக்கம் பெற்று கைலாசநாதர் அருள் புரிகின்றார்.
மலைக்குன்று இருப்பதால் குன்றத்தூர் எனப் பெயருற்று பின்னர் மருவி குன்னத்தூர் என்று அழைக்கப்படலாயிற்று. பொருநையாறும் பச்சையாறும் சங்கமம் ஆவதால் செங்காணி என்பர். செம்மண் பொருந்திய நிலம் என்பதாலும் செங்காணி எனக் கூறுவர்.
கோதாட்டுதல் என்றால் அறியாமல் செய்யும் பிழைகளை நீக்கி பாவங்களைப் போக்குதல் எனப் பொருள். இவைகளை மன்னித்து பொறுத்தருளுவதால் கோதை பரமேஸ்வரர் என்பர்.