மூலவர்: கைலாசநாதர்.
மூலஸ்தானத்தில் கைலாசநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். பத்தடி உயரம் கொண்ட கருங்கல்லிலான லிங்கம். 16 பட்டைகளுடனும் கூடிய அழகிய சிவலிங்கத் திருமேனி. இதனை ஷோடச லிங்கம் என்பார்கள். பின்னணியில் புடைப்புச் சிற்பமாக சோமஸ்கந்தர்.
மூலஸ்தானத்தின் மேற்புறத்தில் கங்காதரர், கங்கை மற்றும் உமையவளுடன் காட்சி தருகின்றார்.
கருவறை சுற்றுப் பிரகாரத்துள் நுழையும் இடமும், வெளிவரும் இடமும் ஒருவர் மட்டுமே நுழையும் அளவில் குறுகலாக உள்ளது. பக்தர்கள் தவழ்ந்து செல்கின்றனர். இதனை புனர்ஜனனி என்றும் சொர்க்க பிரதட்சிணம் என்றும் கூறுவர்.
தென்புறத்தில் உள்ள தனி சன்னிதியிலும் கங்காதரர், கங்கை ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
வலச்சுற்றின் போது யட்சிகளின் திருவுருவங்களை மாடங்களில் தரிசிக்கலாம்.
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா இவை எட்டையும் குறிக்கும் வகையில் எண்பட்டை லிங்கம் ஒன்றும் உள்ளது. இத்தகைய லிங்கத்தை அஷ்டதாரா லிங்கம் என்பர். சந்திரனின் பதினாறு கலைகளையும் 16 பட்டைகளாகக் கொண்ட ஷோடச தாரா லிங்கமும் இத்தலத்தில் உள்ளது. இதனை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர். இந்த லிங்கத்தை உச்சிவேளைப் பொழுதில் தொட்டாலும் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கும்.
ஸ்ரீ கைலாயத்தில் தெற்கு நோக்கிய வாசல் என்பதால் இங்கும் அது போலவே உள்ளது.
இத்தலத்தில் திருமணக் கோலக் காட்சி தரும் சிவ-பார்வதி உலாத்திருமேனிகள் வேள்வித் தீயை வலம் வரும் கோலத்தில் காட்சி தருகின்றனர். கல்யாணசுந்தரரின் வடிவம் அழகாக இருக்கின்றது.
நந்தி சிலைக்கு நான்கு பக்கங்களிலும் சங்கத்தூண்கள் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சுற்றுச் சுவர்களில் கருங்கல் சிற்பங்களும் உள்ளே சுடுமண் சிற்பங்களுமாக உள்ளன.
பிரம்மிப்பூட்டும் பல சிற்பங்களை பிரகார வலச்சுற்றில் கண்டு மகிழலாம். சம்ஹார மூர்த்திகள் மற்றும் அனுக்ரஹ மூர்த்திகள் என விதவிதமாக வடிவமைத்துள்ளனர். சந்தியா தாண்டவ மூர்த்தியின் அழகுத் திருவுருவத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
துவாதச ஆதித்யர்கள் (12) வழிபடும் சிற்பமும், திரிபுர சம்ஹார திருவுருவமும், தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரைகள் நம்மை நோக்கி வருவது போன்ற தோற்றமும், தேர்தட்டில் சிவபெருமான் வீராவேசமாக இருப்பது போன்ற தோற்றமும் எழில் கொண்ட சிற்பங்களாக உள்ளன.
வில்வ மரத்தடியிலுள்ள சிறு கோவிலில் பெரிய ஆகிருதியுடன் விஷ்ணு துர்க்கை சிம்மத்தின் மீது காலூன்றி அசுரனிடம் போராடும் கோலத்தில் காட்சி தருவது அற்புதமாக உள்ளது. பிரம்மன், சப்த மாதாக்கள், ஏகாதச ருத்ரர், மகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை ஆகிய திருவுருவங்களைக் காணலாம்.
(இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் உள்ள கோவில்)