கூடல் எனும் மதுரையை ஆண்ட வல்லபதேவன் எனும் அரசன், ஒரு நாள் இரவு நகர் சோதனையில் வலம் வந்தபோது, ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வடநாட்டு யாத்ரிகன் ஒருவனை எழுப்பி யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டு, யாத்ரிகனை ஏதாவது நீதி ஒன்றை கூறுமாறு பணித்தான்.
யாத்ரிகன் கூறிய ஸ்லோகத்தின் பொருளாவது - மழைக்காலத்திற்கு வேண்டியதை மற்ற எட்டு மாதங்களிலும், இரவிற்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக என்பதாகும்.
கடைசியாக சொன்ன மறுமையின்பத்தைப் பற்றி சிந்தித்த அரசன், தான் ஒரு முயற்சியையும் எடுக்காததை நினைத்து கவலைப்பட ஆரம்பித்தான். இது சம்பந்தமாக அரசனுக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை தீர்த்து வைப்பவர்க்கு பொற்கிழி வழங்கப்படும் என அறிவித்தான். பொற்கிழியை ஊரறிய ஓர் கம்பத்தில் கட்டி வைத்தான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த விஷ்ணுசித்தர் என்பவர், வல்லப தேவனின் சபையிலுள்ள புலவர்களை தனது வாதத் திறமையால் வென்றார். இதிகாசம், புராணம், ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்ச காரணமானவன் என்றும் அவனை சரண் அடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம் என்றும் ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மாவென்றும் முக்திக்கு வழி காட்ட வல்ல பரம்பொருள் எனும் கருத்தின் மூலமாக மன்னனின் சந்தேகத்தைப் போக்கினார். கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாகவே தாழ வளைந்தது. அதைப் பெற்றுக் கொண்டார் விஷ்ணுசித்தன்.
தன்னுடைய சந்தேகங்களுக்கு பொருத்தமான விளக்கங்களை அளித்த விஷ்ணுசித்தனுக்கு பட்டர்பிரான் (அறிஞர்களின் தலைவர்) எனும் சிறப்பு பெயரினை வழங்கி கௌரவித்தான் அரசன். விஷ்ணுசித்தனை யானை மீது ஏற்றி ஊர்வலமாக வரச் செய்தான் அரசன்.
விஷ்ணுசித்தன் பட்டர்பிரானாக வலம் வருவதைக் காண பெருமாளே பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து வான் வெளியில் காட்சி தந்தார். இதை கண்ணுற்ற விஷ்ணுசித்தர், பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கி பல்லாண்டு பாடத் தொடங்கி விட்டார்.
எம்பெருமானிடம், அவனுக்கே நன்மைகள் வேண்டி ஆழ்வார் பாடிய பிரபந்தமே திருப்பல்லாண்டு எனப்படும். பல்லாண்டு, பல்லாண்டு என்று சொல்லி பெருமாளின் நன்மையை வேண்டி காப்பிட்டிருப்பதினால் இதற்கு திருப்பல்லாண்டு என பெயர் வந்தது.
தமக்கு ஒரு நன்மையையும் வேண்டி பிரார்த்திக்காமல் இறைவனுக்கே காப்பிடுகிறார். உன்னுடைய சௌந்தர்யம், மேன்மை ஆகியனவற்றிற்கு ஏதேனும் தீமை ஏற்பட்டு விடுமோ? என பல்லாண்டு பாடுகிறார்.
பரம்பொருள் முன்னே தோன்றினால் யாராயிருந்தாலும், தமக்கு ஏற்படும் தீமைகள் விலக வேண்டுமென்றோ தமக்கு பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றோ பிரார்த்திப்பார்கள். நம்மை காக்கும் சர்வரட்சகனுக்கே அவனது சௌந்தர்யத்திற்கு தீங்கு நேரக்கூடாது என காப்பிட்டு பாடுகிறார் விஷ்ணுசித்தர். தன்னுடைய மங்களாசாசனத்தால் பெருமாளைக் காக்க வேண்டும் என்ற பிரேமையை வெளிப்படுத்தியதால் இவரை பெரியாழ்வார் என்று போற்றுகின்றனர்.
எம்பெருமானின் பேரழகை வர்ணித்து அப்போது பாடிய பாடலான பல்லாண்டு இன்றும் பூவுலகம் முழுவதும் ஒலிக்கின்றது.
எம்பெருமானையும், மார்பில் வாசம் செய்யும் லக்ஷ்மியையும், சங்கு - சக்கரம் ஆகிய படைகளையும் போற்றிப் பாடிய திருப்பல்லாண்டு பிறந்த ஸ்தலம்.
பெருமாளின் பேரழகை கண்டு வியந்த திருமங்கை ஆழ்வார் ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ, ஒருவர் அழகியவா என முடியும் பாசுரத்தை பாடுகிறார்.
வருணன் இத்தலத்தை பேரலையால் தாக்கி அழிக்க முற்பட்டபோது, சிவபெருமானின் சடையிலிருந்து விடுபட்ட நான்கு மேகங்கள் மலை போல உயர்ந்து, நான்கு மாடங்களாக கூடி நின்று மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்றும் கூடல் நகர் என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தி வைக்க வந்த எம்பெருமான், இத்தலத்திலேயே கோவில் கொண்டதாக புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.