முன்பொரு காலத்தில் பகன்-முகன் எனும் இரண்டு அசுரர்கள் தேவர்களையும் முனிவர்களையும் இம்சித்து வந்தனர். அவர்கள் படும் வேதனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, காசி விஸ்வநாதர் இரண்டு பெண் தெய்வங்களை படைத்தார். ஒருத்தி கல்கத்தா காளி, மற்றையவள் கன்னியாகுமரி பகவதி. இவர்கள் இருவரும் அசுரர்களை அடியோடு ஒழித்திட்டதை அம்புஜாட்சி உற்சவம் என்று மலை நாட்டில் கொண்டாடுகின்றனர். அசுரர்களின் தலைவனான பாணாசுரன் தனக்கு அழிவு ஒரு கன்னியால் தான் ஏற்பட வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். இங்கே கோவில் கொண்ட பார்வதி தேவி கன்னிப் பெண்ணாக இருப்பதால் இவ்வூருக்கு கன்னியாகுமரி எனப் பெயர் வந்தது. கன்னியாக இருக்கும் குமரி சிவனை மணக்க வேண்டியும், அசுர சம்ஹாரம் செய்த பாவம் தீர்ந்துவிடவும் இங்கு தவம் மேற்கொண்டாள்.
சுசீந்திரத்தில் கோவில் கொண்ட தாணுமாலயர் கன்னியாகுமரியை மணக்க விரும்பி, தனது விருப்பத்தை தேவர்களிடம் வெளியிட்டார். கன்னியாக இருக்கும் இந்த பகவதியால் தான் பாணாசுரனுக்கு அழிவு என்ற மனநிம்மதியில் இருந்த தேவர்கள் அச்சம் கொண்டனர். தாணுமாலயன் இவளை மணந்தால் பாணாசுர வதம் நடக்காது எனப் பீதியடைந்தவர்கள், கல்யாணத்தைத் தடுத்து நிறுத்துவதில் முனைந்தனர்.
திருமணம் செய்து கொள்வதானால், தாணுமாலயன் சீதனம் தர வேண்டும் என்று நாரதர் மூலமாக, நிபந்தனைகள் இரண்டினை விதித்தனர். முதலாவது - கண்ணில்லா தேங்காய், காம்பில்லாத மாங்காய், நரம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத மலர் ஆகிய ஐந்து பொருட்களை சீதனமாகக் கொண்டு வர வேண்டும். இரண்டாவதாக - இந்தப் பொருட்களுடன், உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாக மணமகன் மணவறைக்கு வந்துவிட வேண்டும்.
திருமணம் நடுநிசியில் நடப்பதென்று ஏற்பாடாயிற்று. சீதனப் பொருட்களைச் சேகரித்து அனுப்பிய தாணுமாலயர், மணமகனாகப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கையில் நாரதர் கோழி வடிவெடுத்துக் கூவினார். பொழுது விடிந்துவிட்டதென எண்ணிய தாணுமாலயர் நின்றுவிட்டார். மணக்கோலத்தில் காத்திருந்த கன்னியாகுமரியும், அன்று முதல் கன்னியாகவே இருந்து கொண்டு கையில் பூமாலையுடன் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து வருகிறாள்.
திருமணத்திற்காக அனுப்பியிருந்த சீதனப் பொருட்களை பகவதி தூக்கி எறிந்துவிட்டாள். அவைகள் விழுந்த இடம் கடற்கரையில் ஏழு வண்ண மணல்களாக மாறி காணப்படுகின்றன. நொறுங்கிய அரிசி, தவிடு போலிருக்கும். பலவித நிறங்களையுடைய மணல் பரப்பைக் கொண்ட கடற்கரைப் பகுதியை இன்றும் காணலாம்.
பகவதி அணிந்துள்ள வைர மூக்குத்தியின் ஒளி கடலில் பிரதிபலித்து, அந்த ஒளியைக் கொண்டுதான் ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரி எனும் இவ்வூரை கண்டுபிடித்ததாக வரலாறு. வைர மூக்குத்தி பிரகாசமாக ஒளி வீசுவதால் கலங்கரை விளக்கமெனக் கருதி கப்பல்கள் கரை தட்ட ஆரம்பித்தன. இதைத் தவிர்க்க கிழக்கு வாசலை நிரந்தரமாக மூடி வைத்துள்ளனர். (ஆடி மாதம் மற்றும் தை மாத பௌர்ணமிகளில் மட்டும் திறப்பதாகக் கூறப்படுகிறது)
பஞ்சநாரி தீர்த்தங்களுள் கன்னியாகுமரி, கன்னித் தீர்த்தம் எனப்படுகிறது. மிதமான ஆகாரம் உண்டு மனதை அடக்கி இதில் ஸ்நானம் செய்வோர் மநுவின் உலகத்திற்குச் செல்வார்கள் என மஹாபாரதம் தெரிவிக்கின்றது. குமர தீர்த்தத்தில் பாவம் செய்பவர்களை மிகக் கொடியவனாகக் கருதுவார்கள் மற்றும் இங்கு செய்யும் தான தர்மங்கள் வாழ்வாங்கு நிலைத்து நிற்கும் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தாம் ஜாவாத் தீவில் பார்க்க இயலாத துருவ நட்சத்திரத்தை கன்னியாகுமரியில் பார்த்ததாக, உலகம் சுற்றி வந்த மார்க்கோபோலோ தெரிவித்துள்ளார். 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், பிற்காலத்தில் சோழ அரசர்களால் புதுப்பிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
சூரிய உதயம் - சூரிய அஸ்தமனம் இவை இரண்டும் காண வேண்டிய இடம் குமரிமுனை. சித்ரா பௌர்ணமி தினத்தன்று அவசியம் காண வேண்டியது.
கிழக்கே வங்காள விரிகுடாக் கடலில் - சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, கன்யா மற்றும் விநாயக தீர்த்தங்கள்் வடக்கே பாப விநாச தீர்த்தம்் இந்து மஹா சமுத்திரத்தில் - மாத்ரு மற்றும் பித்ரு தீர்த்தங்கள்் மேற்கே அரபிக் கடலில் ஸ்தாணு தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்கள் உள்ளன.
சித்திரை விஷு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி தட்சிணாயண புண்ணிய காலம், ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை உத்தராயண புண்ணிய காலம், தை அமாவாசை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்த 9 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது புண்ணியத்தைத் தேடித் தரும்.
கடல் முனையில் கோவில் இருந்தாலும் கோவிலுக்குள் இருக்கும் கிணற்றுத் தீர்த்தம் உப்பு கரிக்கவில்லை. தாமிரபரணியும் அதன் கிளை நதிகளான கோதையாறு மற்றும் பரளியாறு ஆகியன வளம் சேர்க்கின்றன.
தாமிரபரணி ஆறு - கன்னியாகுமரியிலிருந்து 56 கி.மீ. தூரத்திலுள்ள தேங்காய்பட்டணம் எனுமிடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது என்பர்.