இந்திரனிடமிருந்த தெய்வ பசுவான காமதேனுவை, ஒரு மண்டல காலத்திற்கு தனக்கு அனுப்பும்படி வேண்டினார் வசிஷ்டர். அதன்படி அனுப்பி வைத்த இந்திரன், கோரிய காலம் முடிந்தும் பசு திரும்பி வராதது கண்டு கவலையுற்றான். வசிஷ்டரின் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால் அவரது சாபம் கொண்டு சாதாரணப் பசுவாக மாறி பூலோகத்தில் திரிவதாக அறிந்து கொண்டான். சாப விமோசனம் கேட்டு நின்ற அவனுக்கு, பூலோகத்தில் தற்போது சைதை இருக்கும் பகுதியில் சோலை ஒன்றை உண்டாக்கி, லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருமாறு யோசனை கூறப்பட்டது.
உடனே இந்திரன் மேகங்களை அழைத்து குறிப்பிட்ட அந்த பகுதியில் மழையை பொழிந்து அதை குளிர்விக்கும்படி கட்டளையிட்டான். பின்னர் அங்கு சோலை ஒன்றை உண்டாக்கினான். அதில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். அவனது முறையான வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் அவன் முன் பிரத்யட்சமானார். காமதேனு பசுவின் சாபத்தைப் போக்கி, மீண்டும் அது இந்திரனை அடைய வரமருளினார் என ஸ்தல வரலாறு.
கார் (மேகம்) அணி செய்து மழை பெய்ததால் காரணி எனவும், அங்கு கோவில் கொண்டதால் காரணீஸ்வரன் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணத்திற்காக இவரை வழிபடுகிறோமோ அந்த காரணத்தை நிறைவேற்றி வைக்கும் ஆதிகாரண மூர்த்தி என்பதால் காரணீஸ்வரர் என்று பெயர் கொண்டார் என ஸ்தல வரலாறு.
சதய மன்னன் ஆண்டதால் சதயுப்பேட்டை எனப்படுவதாகவும், நவாப் சையது இருந்ததால் சையதுபாத் என்று இருந்ததாகவும், பின்னர் நாளடைவில் மருவி சைதாப்பேட்டை என்றானதாகவும் இரு வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. புராண வரலாற்றில் திருக்காரணீஸ்வரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இழந்த சிருஷ்டி தண்டத்தை திரும்பப் பெற பிரம்மா இவ்விறைவனை வழிபட்டு, உற்சவங்களை நடத்தினார் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.