ஆதியில், இக்கோவில் இருந்த பகுதியை சுற்றிலும் ஷெண்பகக் காடாக இருந்தது. இந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களையும், ரிஷிகளையும் அச்சுறுத்தி இம்சித்து வந்த பந்தகாசுரன் மிகுந்த பலசாலியாக விளங்கினான். ஐந்து வயது சிறுமியால் மட்டுமே தனது உயிர் பிரிய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன்.
தேவர்களும் முனிவர்களும் இந்த அசுரனுக்கு பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள், இவ்வனத்தின் நடுவே ஒரு மண்டபத்தில் அன்னை பராசக்தி அமர்ந்திருந்தாள். தேவர்கள் அருகே சென்றதும் மறைந்து விட்டாள் அன்னை.
உருவம் - அருவம் ஆனபோதிலும், கண்ணில் தோன்றி மறைந்த அந்த திருவுருவத்தை மனதில் நிறுத்தி வழிபட்டனர். தேவர்கள் கிளிகளின் வடிவம் கொண்டு வழிபட்டதாக கூறுவர்.
உரிய சமயத்தில், ஐந்து வயது நிரம்பிய பாலகியின் வடிவத்தில் தோன்றிய அன்னை, பந்தகாசுரனை சம்ஹாரம் செய்து, தேவர்களையும் ரிஷிகளையும் காப்பாற்றினாள். அன்னையின் உத்தரவுப்படி, அசுரனின் பிரேதத்தை இவ்வனத்தில் புதைத்து, ஜயஸ்தம்பத்தை அதன் மீது நாட்டினார்கள். காயத்ரி மந்திரங்களை 24 தூண்களாக அமைத்து, அதன் மீது மண்டபம் எழுப்பினார்கள்.
மண்டபத்துள் விக்ரஹ பிரதிஷ்டை செய்து, தியானத்தில் இப்போது நாம் தரிசிக்கும் அன்னையின் திவ்ய ஸ்வரூபம் இருந்தது.
ஆதி சக்தியான ராஜ ராஜேஸ்வரி, தானே பாலகி வடிவில் வந்து பந்தகாசுரனை வதைத்ததையும், பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தில் எழுந்தருளியிருப்பதையும், அனைவர்க்கும் உணர்த்தினாள்.
கா என்கிற கலைமகளையும், மா என்கிற திருமகளையும், க்ஷ என்கிற மலைமகளையும் மூன்று நேத்ரங்களாகக் கொண்ட பராசக்தி என்பதால் காமாக்ஷி என்னும் திருநாமம் கொண்டாள். அடியார்கள் விரும்பியவற்றை வரமாக அருளுவதாலும் காமாக்ஷி என்ற பெயர் கொண்டாள்.
ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கர யந்திர பிரதிஷ்டையில் அன்னை சூட்சும ரூபத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். இந்த ஸ்ரீ சக்கரம்தான் காம கோடி பீடம். இந்த ஸ்ரீ சக்கரத்தைப் பூஜித்து, பிரம்மன் இழந்த தன் கண் பார்வையைப் பெற்றதாக ஸ்தல வரலாறு.
சக்தி பீடம்: ஆதி சக்தி பீடம், ஸ்ரீ காமகோடி பீடம், ஸ்ரீ சக்கர பீடம் எனப் போற்றப்படும் ஸ்தலம்.
தட்சனால் அவமானமுற்ற தாட்சாயிணி யாகத்தீயில் குதித்து தனது ஸ்தூல உடலை நீத்ததும், அவளது சரீரத்தைத் தன் தலை மீது வைத்துக் கொண்டு, சிவபெருமான் தாண்டவமாடினார். அப்போது அம்பிகையின் திருமேனி துண்டு துண்டாக சிதறி விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகும்.
அவற்றுள், அன்னையின் நாபி விழுந்த இடமே காஞ்சிபுரம். நாபிஸ்தான - ஓட்டியாண பீடம் என்பர்.
காஞ்சிபுரத்திலுள்ள ஆலயங்கள் யாவும் காமாட்சியின் கோவிலை நோக்கியே அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலின் விழாவின்போதும், அந்தந்த ஆலயத்து உற்சவ மூர்த்திகள், காமாட்சி கோவிலைச் சுற்றி வரும் சம்ப்ரதாயம் உள்ளது. காஞ்சி கோவில்களில் தனியாக அம்பாள் சந்நிதி கிடையாது. காமக்கோட்டமே பொதுவான சந்நிதி ஆகும்.
தீர்த்தக்குளம்: அசுரனின் ரத்தத்தைக் குடித்ததால் அசுர குணங்கள் கொண்டு விஷ்ணுவையே எதிர்த்த பூத கணங்களும், இந்த தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு.
தீர்த்தக் குளத்தினருகே, நின்ற - வீற்றிருந்த - சயனித்த எனும் மூன்று காலங்களில் மஹாவிஷ்ணு பூத நிக்ரஹப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். பூத கணங்களும் இருக்கின்றனர்.