மீனாட்சியின் வளர்ப்பு அன்னையான காஞ்சனமாலை, ஜீவன் முக்தியடையும் வழியைப் பற்றியும், தவ வலிமைகளைப் பற்றியும் விவரிக்குமாறு கௌதம முனிவரை வேண்டினாள். வேத பாராயணங்கள் செய்தல், சிவனை வழிபடுதல், தான - தர்மங்கள் செய்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறும், புனித நதிகள் பலவும் கலக்கும் கடலில் ஸ்நானம் செய்து தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளுமாறும் கௌதம முனிவர் உபதேசித்தார்.
சமுத்திரமே இல்லாத மதுரையில் எப்படி கடல் ஸ்நானம் செய்வது என யோசித்த காஞ்சனமாலை, மகள் மீனாட்சியிடம் கூறி, "உன் கணவனால் முடியாதது ஏதுமில்லை" என கெஞ்சினாள். மீனாட்சியின் மூலமாக விஷயங்களை அறிந்த பரமன், மதுரையின் கிழக்கே உள்ள ஒரு குளத்தில் ஏழு கடல் நீரையும் வரவழைத்தார். இதனால் 'ஏழு கடல் தெரு' என்ற பெயரும் வந்தது.
கடல் ஸ்நானம் மற்றும் தீர்த்த யாத்திரைகள் செய்ய கணவனுடன் செல்ல வேண்டும். ஆனால் இவளது கணவனான மலையத்துவஜ பாண்டியன் உயிரோடு இல்லை. வேறு வழியின்றி ஒரு பசுவின் கன்றின் வாலைப் பிடித்துக் கொண்டு நீராடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் நொந்து போன காஞ்சனமாலை மீண்டும் மீனாட்சியிடம் கோரிக்கை வைத்தாள்.
இறைவனின் கட்டளைப்படி, மலையத்துவஜ பாண்டியனை இந்திரன் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தான். சிவனடியார்கள் வழிகாட்ட, முறைப்படி தீர்த்த யாத்திரை செய்ய கணவனுடன் ஏழு கடல் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தாள். பின்னர் இருவரும் தெய்வ வடிவம் பெற்று விண்ணுலகம் சென்றனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.