இவ்வூரைச் சேர்ந்த மூலன் எனும் மேய்ப்பன் பசுக்களை மேய்த்து ஜீவனம் நடத்தி வந்தான். அவன் சிவபக்தி மிகுந்தவன்.
ஒருநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தவன், விஷஜந்து தீண்டியதால் இறந்து விட்டான். இறந்து கிடந்த மேய்ப்பவனைச் சுற்றிலும் பசுக்கள் கூட்டமாக நின்று அழுது கொண்டிருந்தன.
தங்களைக் குளிப்பாட்டி, உணவளித்து, தாய் போல் பாதுகாத்து வந்தவன் இறந்து விட்டதை பொறுக்க முடியாமல் அந்த வாயில்லா ஜீவன்கள் அழுதன. அவ்வழியே வந்த சிவனடியார் ஒருவர் இதைக் கண்டு அதிசயித்து நின்று விட்டார். இறந்தவன் அருகே சென்று பஞ்சாட்சர மந்திரம் ஜெபிக்கலானார்.
இறந்து கிடந்தவனும் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறிக் கொண்டே இறந்திருக்கிறான். அவனது உடம்பிலும் பசுக்களின் உடம்பிலும் ஏதோ ஒரு அசைவு தென்பட்டதை சிவனடியார் கவனித்தார். இருள் கவ்வும் இரவு வந்தும் பசுக்கள் நகராமல் இருக்கவே, பசுக்களின் சோகத்தைப் போக்க வேண்டி, இறந்து கிடந்தவனின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தார்.
மேய்ப்பவன் உயிர் பெற்று எழுந்தான். பசுக்களை ஓட்டிக் கொண்டு போய் அதனதன் இருப்பிடங்களில் சேர்த்தான். பின்னர் தனது வீட்டிற்குச் சென்றான். பிள்ளை வராதது கண்டு தவித்துக் கொண்டிருந்த தகப்பனும், கணவனைக் காணாது ஏங்கிக் கொண்டிருந்த மனைவியும், மூலனைக் கண்டதும் சந்தோஷம் கொண்டனர். தன்னுடைய தவிப்பை வெளிப்படுத்தும் வகையில் மூலனின் கரத்தைப் பற்றினாள் மனைவி.
கையை உதறிவிட்டு, தான் மூலன் இல்லை என்றும், நடந்த விபரங்களையும் மூலன் வடிவில் இருந்த சிவனடியார் தெரிவித்தார். இதைக் கேட்ட மூலனின் குடும்பத்தினரும், ஊர் மக்களும் அதிர்ச்சியுற்றனர்.
பின்னர் சிவனடியார் தனது உடலை வைத்திருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே அவரது உடலைக் காணாது, கலக்கமுற்றார். தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தபோது, அவருக்குக் காட்சி தந்தார் சிவபெருமான். "எல்லா உடலும் ஒன்றுதான், எல்லா உயிர்களும் ஒன்றுதான்" எனப் பிறப்பு - இறப்பு ரகசியங்களை எடுத்துரைத்தார்.
இந்த விபரங்களை உலகுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்ட திருமூலருக்குக் காட்சி தந்த காசி விஸ்வநாதரின் ஆலயம் தற்போது பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.