அம்பரீஷனுக்கு அதிதியாக வந்த துர்வாச முனிவர் அம்பரீஷனை தர்மசங்கடப்படுத்தி, கோபம் கொண்டு பூதத்தை அவன் மீது ஏவினார். திருமாலிடம் தஞ்சம் புகுந்தான் அம்பரீஷன். துர்வாசர் மீது பிரயோக சக்கரத்தை ஏவினார் திருமால். அந்த சக்கரம் பிரயோக நிலையில் ஆதி வரதராஜரின் கையில் காணப்படுகிறது. இதன் காரணமாக இவ்வூர் அக்ரஹாரத்தில் வலப்பக்கமாக வீடுகள் இல்லை. இடப் பக்கம் மட்டுமே ஒற்றைவாடையாக உள்ளது.
இவ்வூரைச் சேர்ந்த வரதன் வேங்கடன் என்பவர் ராஜ ராஜ சோழனிடம் தனது ஊரிலுள்ள கோவிலில் சேவிப்பதற்கு ராமர் விக்ரஹம் ஒன்றும் இல்லை என தனது குறையை தெரியப்படுத்தினார். அவர் கேட்ட விக்ரஹங்களை சோழராஜாவும் தந்ததாக குறிப்பொன்று கூறுகிறது. ராஜ ராஜ சோழன் காலத்தில் செய்யப்பட்ட பஞ்சலோக படிமங்களான ராமர் விக்ரஹங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
காலப்போக்கில் இந்த சிலைகள் பூமிக்குள் புதையுண்டு போனது. பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு வந்த கனவின் மூலமாக புதையுண்டிருந்த விஷயம் தெரியவந்து மீண்டும் கோவில் கொண்டனர்.
ஒரு சமயம் திருடர்கள் இந்த சிலைகளை திருடிக்கொண்டு குடமுருட்டி வாய்க்கால் வரை வந்து விட்டனர். இவ்வூரின் காவல் தெய்வமான சந்தன மாரியம்மன் சூலத்துடன் எதிர்பட்டு, திருடர்களின் கண் பார்வையை பறித்து குருடாக்கி விட்டாள். தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட திருடர்கள், சிலைகளை மீண்டும் கோவிலுக்குள் வைத்த பிறகே, கண்பார்வை கிடைத்தது. இதன் காரணமாக அந்த வாய்க்காலை பொட்டை வாய்க்கால் என்றே கூப்பிடுகின்றனர்.
இவ்வூரில் கைலாசநாதர் கோவில் ஒன்றும் உள்ளது. சிவ பரிவாரங்களாக பருத்தியூர் விநாயகர், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், நந்திகேஸ்வரர், தண்டாயுதபாணி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
ஒரு கிரகண வேளையில் ராஹுவின் நச்சுக் காற்றால், முகப்பொலிவு இழந்த சூரியன், இத்தலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டு, மீண்டும் முகப் பொலிவு பெற்றான் என ஸ்தல வரலாறு.
பரிதி என்றால் சூரியன் எனப் பொருள். சூரியன் சிவபெருமானை வழிபட்டு நலன் பெற்ற ஊர் என்பதால் பரிதி - ஊர் பரிதியூர் எனப் பெயருற்று நாளடைவில் மருவி பருத்தியூர் என்றானது.