ராவணனின் அழிவிற்கு பின்னர் அவனது சகோதரனான கரன் என்பவன் இலங்கையை தான் ஆள வேண்டுமென ஆசை
கொண்டு, இத்தலத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்தான். கரன் வழிபட்டதால் இவ்விறைவனுக்கு
கரபுரநாதர் எனும் திருநாமம்.
இவ்வாலயத்து அர்ச்சகர் ஒரு நாள் வெளியூர் செல்ல நேரிட்டதால் அவரது மகனான குணசீலன், ஸ்வாமிக்கு அபிஷேகம்
செய்ய முற்பட்டான். லிங்கத்தின் சிரசுப்பகுதி சிறுவனுக்கு எட்டவில்லை. தன்னால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய
முடியவில்லையே என வருந்திய குணசீலனுக்காக, ஸ்வாமி தனது சிரசை சாயத்துக் கொடுத்தார். இதன் பொருட்டே
லிங்கத் திருமேனியின் பாணம் சாய்ந்தவாறு உள்ளதாக ஸ்தல வரலாறு.
சேர - சோழ - பாண்டிய மன்னர்களை பகைத்துக் கொண்டதால் தேசத்தையும் தன்னையும் இழந்த பாரி மன்னனின்
மகள்களான அங்கவை - சங்கவை இருவரும் சகல செல்வங்களையும் இழந்து ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த
சமயம், அங்கு வந்த ஒளவையார் அவர்களை அடையாளம் தெரிந்துகொண்டு, நடந்ததை அறிந்து, அவர்களுக்கு
மணமுடிக்க உதவுமாறு, இங்கிருக்கும் விநாயகரை வேண்டினார். விநாயகரின் அருளாலும், மூவேந்தர்களின் ஆசியோடும்
இரு பெண்களின் கல்யாணம் இனிதே நடந்தேறியது.
விநாயகரே திருமண நிச்சயதார்த்த ஓலை எழுதிக் கொடுத்த ஸ்தலம் என்பதால் இங்கு வழிபடுவோர்க்கு திருமணத்தடை
விலகும்.