மூலவர்: ஸ்ரீ கமல வரதராஜப் பெருமாள், தாயார்: ஸ்ரீ சுந்தர மஹாலட்சுமி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கமல வரதராஜப் பெருமாள் மேற்கு பார்த்த சன்னதியில், நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் சமேதராக சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி ஸ்ரீ வரதராஜர் மற்றும் இதர உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் எழில் கொண்டவை.
மூலவர் மற்றும் உற்சவப் பெருமாளின் வலதுகை இடுக்கில் ஒரு தாமரை மொக்கு இருக்கும்.
மூலவருக்கு எதிரே அஷ்ட நாகங்களை அணிந்த கருடாழ்வார் தரிசனம் தருகிறார். தன கடாட்ச கருடன் எனப் போற்றப்படுகிறார்.
தாயார் ஸ்ரீ சுந்தர மஹாலட்சுமி பத்மாசனம் கொண்டு, கமலத்தில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படுகின்றார். மேற்கரங்களில் தாமரை மலர்களும் கீழ்க்கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சன்னதி.
தாயார் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது அதிசயம். ஆறு எனும் எண் சுக்ரனுக்குரியது. சுக்ரனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த ஆதிமூல மஹாலட்சுமியை சுக்ரன் வெள்ளிக்கிழமைதோறும் தொழுகிறான். எனவே இங்கே லட்சுமியை வழிபடுவோர்க்கு குபேர சம்பத் கடாட்சம் கிடைக்கும் என ஐதீகம்.
லட்சுமி கணபதி, ஆபத்சகாய ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
முதலில் தாயாரை சேவிக்க வேண்டும் என்பது இங்கு சம்ப்ரதாயமாக உள்ளது.