சிவபெருமான் பஞ்சாட்சரத்தின் பொருளையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கிக் கொண்டிருந்தபோது, உமையவள் ஒரு மயிலின் அழகில் மயங்கி கவனம் சிதறினாள். இதனால் கோபம் கொண்ட இறைவன் சபித்ததினால் உமையவள் மயிலாக உருவம் கொண்டாள்.
மயில் உருவம் கொண்டு பூலோகம் வந்த உமையவள், சாப விமோசனம் வேண்டி கடுந்தவம் புரிந்தாள். இத்தலத்திலுள்ள புன்னை மரத்தடியில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தை வழிபட்டு பூஜித்து வந்தாள். அவளது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி உமையவளை மணந்து கொண்டார் என்றும், உமையவளே இங்கு கற்பகாம்பாளாகவும், அவளுக்கு காட்சி தந்த இறைவன் கபாலீஸ்வரனாகவும் எழுந்தருளியுள்ளனர் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிவநேச செட்டியார் எனும் சிவபக்தர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவர் தமது ஒரே மகளான பூம்பாவையை ஞானசம்பந்தருக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என நிச்சயித்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூம்பாவையை பாம்பு ஒன்று கடித்து இறந்து விட்டாள். அவளை தகனம் செய்து, அவளது அஸ்தியை ஒரு குடத்தில் போட்டு வைத்திருந்தார்.
ஞானசம்பந்தர் திருமயிலைக்கு வந்தபோது நடந்த விபரங்களை அவரிடம் கூறி அஸ்தியை அவரிடம் காண்பித்தார். உடனே ஞானசம்பந்தர் அந்த குடத்தை கபாலீஸ்வரன் முன்னால் வைத்து அவளை உயிர்ப்பிக்க வேண்டி பல பதிகங்களைப் பாடினார். இறைவனருளால் பூம்பாவை உயிர் பெற்றெழுந்தாள். அவளை இறைத்தொண்டு செய்யும்படி பணித்துவிட்டு சம்பந்தர் சென்றார் என ஸ்தல வரலாறு. பூம்பாவைக்கு சந்நிதி ஒன்றும் உள்ளது.
அறுபத்திமூன்று நாயன்மார்களுள் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த ஸ்தலம் இது. வள்ளுவர் பெருமானும் மயிலையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆழ்வாராதிகளுள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த ஸ்தலம். மஸ்தான் சாஹிப் என்ற இஸ்லாமிய மகான் மயிலையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆதியில் கடற்கரை ஓரமாக இக்கோவில் இருந்ததை, ஞானசம்பந்தரின் பதிகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. போர்ச்சுகீசியர் கோட்டை கட்டும்போது இக்கோவில் அழிந்து விட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. தற்போதைய கோவில் முன்னூறு ஆண்டுகளுக்கும் உட்பட்டது என்கின்றனர்.
உமா தேவியார் மயிலுருவில் தவம் புரிந்த ஸ்தலம் என்பதால் மயிலாபுரி எனப் பெயர் கொண்டு மயிலை என்றானதாக கூறுவர். மயில் - ஆர்ப்பு - ஊர் - ஸ்ரீ மயிலாப்பூர் என்றும் கூறுவர்.
இது ஒரு தேவார திருத்தலம், சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.