ஸ்ரீ நடராஜரின் பஞ்ச ஸ்தலங்களாக - கரிசூழ்ந்த மங்கலம், கட்டாரி மங்கலம், மேலக்கருவேலங்குளம், சிதம்பரம், செப்பறை ஆகியவற்றை கூறுவர்.
கட்டாரிமங்கலத்தை ஆண்டு வந்த வீரபாண்டியன், செப்பறையிலுள்ள நடராஜரின் அழகில் மயங்கி, அதே போன்ற நடராஜர் படிமம் வேண்டுமென்று ராமபாண்டியனிடம் கேட்டுக் கொண்டான். சிற்பி, நெல்லையப்பர் கோவிலுக்கு ஒன்றும், கட்டாரிமங்கலத்திற்கு ஒன்றுமாக இரண்டு படிமங்கள் செய்தான். இதே போன்ற சிற்பம் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாதென முடிவெடுத்த வீரபாண்டியன், சிற்பியின் கைகளை வெட்டிவிட்டு, இரண்டையும் தூக்கிக் கொண்டு போனான்.
போகும் வழியில் ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, வெள்ளப்பெருக்கால் தடுமாறி சிலையை ஆற்றில் போட்டுவிட்டான். ஆற்றில் விழுந்த சிலை சிறிது காலம் புதையுண்டிருந்தது. புதையுண்டிருந்த சிலையை ஊர் மக்கள் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிவதீட்சை பெற்ற சிவ பக்தனான வரதுங்கன் என்பவன் இவ்வூரை ஆண்டு வந்தபோது, அவனுடைய கண்களுக்கு இப்பகுதி முழுவதும் சிவலிங்கங்களாகவே காட்சி தந்ததாம். அதனால் இவ்வூரில் கால் வைக்க அஞ்சி, சற்று தூரத்தில் இருக்கும் சோலை நகரில் இருந்துகொண்டே ஆட்சி செய்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது.
முன் காலத்தில் இப்பகுதியில் கரும்புத் தோட்டங்கள் மிகுந்து காணப்பட்டன. கரும்பைத் தின்ன, காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வரும். இதனால் 'கரி சூழ்ந்த மங்கலம்' எனப் பெயர் கொண்டது. 'கரி' என்றால் யானை.