சிறந்த விஷ்ணு பக்தனான இந்திரதும்னன், விஷ்ணு பூஜையில் லயித்திருந்தபோது துர்வாச முனிவர் அவனை நாடி வருவதை கவனிக்கவில்லை. தன்னை இந்திரதும்னன் அவமதிப்பதாகக் கருதிய முனிவர் கோபம் கொண்டு, அவனை காட்டு யானையாக மாறும்படி சாபம் கொடுக்கிறார். யானையின் காலை முதலை ஒன்று கவ்வும் சமயத்தில் விமோசனம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
தாமிரபரணிக் கரையில் தவம் செய்துக் கொண்டிருந்த முனிவர் ஒருவரின் காலை விளையாட்டாகப் பிடித்திழுத்து கேலி செய்த ஹுஹு எனும் கந்தர்வனை முதலையாக மாறும்படி சபிக்கிறார் முனிவர். யானையால் விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.
யானைக் கூட்டங்களோடு கஜேந்திரனாக திரிந்த இந்திரதும்னன் ஒரு நாள் ஆற்றில் இறங்கியதும் முதலை காலைப் பிடித்துக் கொண்டது. "ஆதிமூலமே என்னைக் காப்பாற்று" என யானை அலற, அங்கு பிரத்யட்சமான மஹாவிஷ்ணு முதலையைக் கொன்று, யானையைக் காப்பாற்றி, இருவருக்கும் வைகுண்ட பதவி அளித்தார் என ஸ்தல வரலாறு.
"ராமபிரானை தரிசிக்கும் பாக்யம் இனி எப்போ வருமோ?" என்ற சிந்தனையுடன் கஜேந்திர வரதரை தரிசித்த ஹனுமனுக்கு ராமராகவே சேவை சாதித்தார் பெருமாள். கபி (அ) கவி என்றால் குரங்கு. கபி பெருமாளை தரிசித்ததால் இவ்வூர் கபிஸ்தலம் என்றானது.
ஆற்றங்கரையில் கண்ணனாக சேவை சாதித்ததால் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
ஆஞ்சநேயருக்கு - ராமராகவும், திருமழிசையாழ்வாருக்கு - கண்ணனாகவும், கஜேந்திரனான யானைக்கு மஹாவிஷ்ணுவாகவும் பிரத்யட்சமானதாக ஐதீகம். குரங்கு, யானை ஆகிய மிருகங்களுக்கு காட்சி தந்த ஸ்தலம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் ஒன்று.